ஆண்டிகுவா: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் ‘டி’ பிரிவில் ஆஸ்திரேலிய அணி நமீபியாவை எதிர்கொண்டது.
பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது. ஆஸ்திரேலியாவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நமீபியா, 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக நமீபியாவின் அணித் தலைவர் ஹெகார்ட் எராஸ்மஸ் 36 ஓட்டங்கள் எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 73 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆஸ்திரேலியா 5.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்கள் எடுத்து இலக்கை கடந்தது.
அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 34 ஓட்டங்களுடனும், மிட்செல் மார்ஷ் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இலக்கை கடந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா இத்தொடரில் தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ளது.