தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூரோ 2024: சிரமப்பட்டு வென்ற இங்கிலாந்து

2 mins read
01a94779-933e-4217-a416-cc4ab9a6a064
செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு கோல் போட்ட பிறகு கொண்டாடும் ஜூட் பெலிங்ஹம் (முன்னால்). - படம்: ராய்ட்டர்ஸ்

கெல்சன்கர்கன் (ஜெர்மனி): யூரோ 2024 காற்பந்துப் போட்டியில் செர்பியாவுக்கு எதிரான சி பிரிவு ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது இங்கிலாந்து.

ஆட்டத்தின் ஒரே கோலை 13வது நிமிடத்தில் போட்டார் ஜூட் பெலிங்ஹம். தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து பிற்பாதியாட்டத்தில் சிரமப்பட்டபோதும் ஒருவழியாக வென்றது.

பிற்பாதியாட்டத்தில் தனது அணியின் தற்காப்பு வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் விளையாடியதை இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட் பாராட்டினார்.

“மாறுபட்ட இங்கிலாந்தைக் காண முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. எங்கள் பெனால்டி பாக்ஸ் பகுதியில் தற்காப்பு ஆட்டத்தில் சிறப்பாக விளையாட முடியும் என்பதைக் காண்பித்தோம். அது, எங்களின் குழு உணர்வுக்கு மெருகூட்டும்,” என்றார் சவுத்கேட்.

மற்றொரு சி பிரிவு ஆட்டத்தில் டென்மார்க்கும் சுலோவேனியாவும் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.

ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் டென்மார்க்கை முன்னுக்கு அனுப்பினார். சென்ற யூரோ போட்டியில் திடலில் மாரடைப்பால் உயிருக்குப் போராடி மறுபிறவி எடுத்த எரிக்சனுக்கு இந்த கோல் நெஞ்சில் நீங்கா இடம்பிடிக்கும் ஒன்றாக அமைந்தது.

ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் சுலோவேனியாவின் எரிக் ஜான்ஸா கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

முன்னதாக டி பிரிவில் போலந்தை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது நெதர்லாந்து.

ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் ஆடம் புக்சா போலந்தை முன்னுக்கு அனுப்பினார். அதற்கு 13 நிமிடங்கள் கழித்து கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் நெதர்லாந்தின் கொடி காக்போ.

மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கி ஓரிரு நிமிடங்களிலேயே நெதர்லாந்தின் வெற்றி கோலைப் போட்டார் வவுட் வெக்ஹோர்ஸ்ட். 83வது நிமிடத்தில் அவரின் கோல் விழுந்தது.

குறிப்புச் சொற்கள்