யூரோ 24: வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்ட ஸ்காட்லாந்து

1 mins read
1f86a8ad-7811-4a89-99d9-7ea2c24ac630
ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டம் முடிந்த பிறகு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சுவிட்சர்லாந்து வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

கொலோன்: யூரோ 24 காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டது ஸ்காட்லாந்து.

ஏ பிரிவில் முதல் ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 5-1 எனும் கோல் கணக்கில் படுதோல்விகண்ட ஸ்காட்லாந்து, சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 என சமநிலை கண்டது. அதனால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஸ்காட்லாந்து தக்கவைத்துக்கொண்டது.

இந்த ஆட்டத்தில் பெரிதும் மேம்பட்டிருந்த ஸ்காட்லாந்தை 13வது நிமிடத்தில் முன்னுக்கு அனுப்பினார் ஸ்காட் மெக்டாமினே. அவர் உதைத்த பந்து சுவிட்சர்லாந்து தற்காப்பு வீரர் ஃபேபியன் ‌ஷாரின் காலில் பட்டு வலைக்குள் சென்றது.

எனினும், சிறிது நேரத்தில் அற்புதமான கோலின் மூலம் ஆட்டத்தை சமப்படுத்தினார் சுவிட்சர்லாந்து வீரர் ‌ஷர்டான் ‌ஷக்கிரி.

ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து போட்ட மேலும் இரு கோல்கள் ஆஃப்சைட் காரணமாக அனுமதிக்கப்படவில்லை. வெற்றிபெற்றிருந்தால் சுவிட்சர்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகியிருக்கும்.

முன்னதாக மற்றோர் ஏ பிரிவு ஆட்டத்தில் ஹங்கேரியை 2-0 எனும் கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது போட்டியை ஏற்று நடத்தும் ஜெர்மனி. ஜமால் முசியாலா, இல்க்காய் குண்டோகன் ஆகியோர் ஜெர்மனியின் கோல்களைப் போட்டனர்.

விறுவிறுப்பான பி பிரிவு ஆட்டத்தில் குரோவே‌ஷியாவை வெல்லவிடாமல் செய்தது அல்பேனியா.

இரு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சமநிலை கண்டன. குரோவே‌ஷியா 2-1 எனும் கோல் கணக்கில் முன்னணி வகித்தது. ஆனால் ஆட்டம் முடிவுறும் நிலையில் இருந்தபோது கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் அல்பேனியாவின் கிலாவுஸ் ஜாசுலா.

குறிப்புச் சொற்கள்