தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரை இறுதியை எட்டிப் பிடிக்கும் இந்தியா

2 mins read
c6c72685-6842-43e1-979e-3a67ac1d1060
பங்ளாதேஷ் வீரரை எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றிய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

ஆன்டிகுவா: பங்ளாதேஷுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண சூப்பா் 8 ஆட்டத்தில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியுடன் அரையிறுதிச் சுற்றுக்கு கிட்டத்தட்ட முன்னேறியுள்ளது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையிலான முக்கியத்துவம் மிகுந்த ஆட்டம் மேற்கு இந்தியத் தீவுகளின் ஆன்டிகுவா நாா்த் சௌன்ட் நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பூவா தலையா வென்ற பங்ளாதேஷ் பந்துவீச்சைத் தோ்வு செய்தது.

முதலில் பந்தடித்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ஓட்டங்களை எடுத்தது. ரோகித் 23, கோலி 37, ரிஷப் பந்த் 36, ஷிவம் துபே 34 மற்றும் ஹர்திக் பாண்டியா 50 ஓட்டங்கள் எடுத்தனர்.

பங்ளாதேஷ் சார்பில் ரிஷாத் மற்றும் தன்சிம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷகிப், 1 விக்கெட் வீழ்த்தினார்.

197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பங்ளாதேஷ் விளையாடியது.

முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி.

லிட்டன் தாஸ் 13, ஹசன் 29, தவ்ஹித் 4, ஷகிப் 11, கேப்டன் ஷான்டோ 40, ஜாகிர் அலி 1, ரிஷாத் 24 மற்றும் மஹ்மதுல்லா 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது அந்த அணி. இதன் மூலம் 50 ஓட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் குல்தீப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அர்ஷ்தீப் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஹர்திக் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஆட்ட நாயகன் விருதை ஹர்திக் பாண்டியா வென்றார்.

இந்தத் தொடரில் இதுவரை தோல்வியைத் தழுவாத அணியாக இந்தியா உள்ளது. அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.

குரூப் 1 பிரிவில் தலா 2 வெற்றிகளுடன் நிகர ஓட்ட விகிதம் +2.425 என உள்ளதால் இந்தியா அரையிறுதியில் கிட்டத்தட்ட நுழைந்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்