ஃபிராங்க்ஃபர்ட்: யூரோ 2024 காற்பந்துப் போட்டியில் சுவிட்சர்லாந்துடன் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டு ஏ பிரிவில் முதலிடத்தில் முடித்தது போட்டியை ஏற்று நடத்தும் ஜெர்மனி.
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் ஜெர்மனியின் நிக்லாஸ் ஃபுவெல்குருக். சிறப்பாக விளையாடிய சுவிட்சர்லாந்து வெற்றிபெற்றிருந்தால் அந்த அணி ஏ பிரிவில் முதலிடத்தைப் பறித்துக்கொண்டிருக்கும்.
முற்பாதியாட்டத்தில் டேன் இன்டோய் கோல் போட்டு சுவிட்சர்லாந்தை முன்னுக்கு அனுப்பினார். ஏ பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து ஜெர்மனிக்கு அடுத்தபடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் முன்னேறியது சுவிட்சர்லாந்து.
ஏ பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் ஹங்கேரி, ஸ்காட்லாந்தைப் போட்டியிலிருந்து வெளியேற்றியது.
ஆட்டத்தில் கூடுதல் நேரத்தின் 10வது நிமிடத்தில் வெற்றி கோலைப் போட்டு ஹங்கேரி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள உதவினார் கெவின் சொபொத். இப்போட்டியில் உள்ள ஆறு பிரிவுகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் ஆகச் சிறந்த நான்கு அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.
ஹங்கேரியின் பர்னாபாஸ் வார்கா, மோசமான காயத்துக்கு ஆளானதால் ஆட்டத்தில் 10 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டன.
ஸ்காட்லாந்து அதன் வரலாற்றில் இதுவரை எந்த முக்கிய அனைத்துலகப் போட்டியிலும் முதல் சுற்றைத் தாண்டவில்லை. அந்தப் போக்கை மாற்றும் அதன் முயற்சி தொடர்கிறது.