டிரினிடாட்: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணி முன்னேறியுள்ளது.
ஐசிசி 50 ஓவர் மற்றும் டி20 உலகக் கிண்ண வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.
டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் வியாழக்கிழமை காலை தென்னாப்பிரிக்காவும் ஆப்கானிஸ்தானும் மோதின.
முதலில் பந்தடித்த ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவின் ஜான்சென் மற்றும் ஷம்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் 10 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் பறிகொடுத்து வெற்றி பெற்றது.
ஹெண்ட்ரிக்ஸ் 29, மார்க்ரம் 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஐசிசி தொடர்களில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த ஆப்கானிஸ்தான் அணியின் இறுதிப்போட்டி கனவு தகர்ந்தது.
தொடர்புடைய செய்திகள்
நீண்டகாலத் தடைக்குப் பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் தென்னாப்பிரிக்கா கால்பதித்து 32 ஆண்டுகள் ஆகின்றன.
1992ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அந்த அணி, 50 ஓவர் ஒருநாள் போட்டி, 20 ஓவர் டி20 போட்டி ஆகியவற்றின் உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒருமுறைகூட இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றதில்லை.
ஆயினும், அரை அறுதி ஆட்டம் வரை அந்த அணி பல முறை முன்னேறி உள்ளது. எட்டு முறை பல உலகக் கிண்ண ஆட்டங்களில் அரை இறுதியில் ஆடிய தென்னாப்பிரிக்கா ஏழு முறை தோல்வியைத் தழுவியது.
வியாழக்கிழமை ஆப்கானிஸ்தானுடன் நடைபெற்ற அரை இறுதியில் வென்று முதல் உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்று சாதனை படைத்து உள்ளது.
அதனை அந்த அணி வீரர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டாடினார்கள். தென்னாப்பிரிக்க அணியின் ரசிகர்களும் குதூகலத்தில் மூழ்கினர்.