கெல்சன்கர்க்கன் (ஜெர்மனி): யூரோ காற்பந்துப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்கும் ஜார்ஜியா, போர்ச்சுகலை 2-0 எனும் கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
யூரோ மட்டுமின்றி முதல் முறையாக அனைத்துலகப் போட்டி ஒன்றில் பங்கேற்கும் ஜார்ஜியா, தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது.
போர்ச்சுகலுக்கு எதிரான எஃப் பிரிவு ஆட்டத்தில் க்விஷா க்வாராட்ஸ்கெலியா, ஜியோர்ஜஸ் மிக்காவ்ட்டாடஸ் ஆகியோர் ஜார்ஜியாவுக்கு கோல்களைப் போட்டனர். போர்ச்சுகல் ஏற்கெனவே இரு ஆட்டங்களை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது.
மற்றோர் எஃப் பிரிவு ஆட்டத்தில் செக் குடியரசை 2-1 எனும் கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது துருக்கி. செக் குடியரசு வெளியேற்றப்பட்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் செக் குடியரசின் இரு வீரர்கள் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு நீக்கப்பட்டனர். மேலும், இரு அணிகளிலும் மொத்தம் 16 விளையாட்டாளர்களுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இ பிரிவில் ருமேனியா, சுலோவாக்கியா, பெல்ஜியம் ஆகிய மூன்று அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. மூன்று அணிகளும் நான்கு புள்ளிகளைப் பெற்றன. அதே அளவு புள்ளிகளைப் பெற்ற உக்ரேன் கோல் வித்தியாசத்தில் வெளியேற்றப்பட்டது.
பெல்ஜியம், உக்ரேன் மோதிய ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது. சுலோவாக்கியாவுடன் ருமேனியா மோதிய ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.
24 ஆண்டுகளாக முக்கியப் போட்டிகளில் சோபிக்காத ருமேனியா, இம்முறை துயரத்தைத் துடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜார்ஜியாவும் ஸ்பெயினும் மோதும். சுலோவாக்கியா, இங்கிலாந்தைச் சந்திக்கும். பெல்ஜியமும் பிரான்சும் மோதும். போர்ச்சுகல், சுலோவேனியாவைச் சந்திக்கும்.
ருமேனியா, நெதர்லாந்தைச் சந்திக்கும். துருக்கியும் ஆஸ்திரியாவும் மோதும்.