இங்கிலாந்தைப் பழிதீர்த்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி ஆட்டத்தைக் கைப்பற்றியது இந்தியா

இங்கிலாந்தைப் பழிதீர்த்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி ஆட்டத்தைக் கைப்பற்றியது இந்தியா

2 mins read
b2d9668d-771a-4027-a977-1b6dbe2cbb8f
இங்கிலாந்தின் ஜானி பெய்ர்ஸ்டோவை வீழ்த்திய மகிழ்ச்சியைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடினார் அக்சர் பட்டேல் (இடது). - படம்: ஏஎஃப்பி

கயானா: டி20 உலகக் கிண்ண 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது.

டி20 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆட உள்ளது. இதற்கு முன் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் பங்கேற்றது.

வியாழக்கிழமை (ஜூன் 27) சிங்கப்பூர் நேரப்படி இரவு 11.30 மணிக்கு கயானா விளையாட்டரங்கில் தொடங்கிய ஆட்டத்தில் பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அப்போது மழை குறுக்கிட்டதால் ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது.

பந்தடிக்கத் தொடங்கிய இந்தியா, கடினமான ஆடுகளத்தில் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களைச் சேர்த்தது.

ஒரு கட்டத்தில் இந்தியா 8 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 65 ஓட்டங்களைச் சோ்த்திருந்தபோது மீண்டும் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது ரோகித் - சூா்யகுமாா் கூட்டணி 73 ஓட்டங்களைச் சோ்த்து அசத்தியது. இதில், ரோகித் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 57, சூா்யகுமாா் 36 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 47 ஓட்டங்களில் வீழ்ந்தனா்.

பின்னா் பந்தடித்தவர்களில் ஹா்திக் பாண்டியா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 23 ஓட்டங்களுக்கு வெளியேற, ஷிவம் துபே கோல்டன் டக் ஆனாா். அக்ஸா் படேல் 1 சிக்ஸருடன் 10 ஓட்டங்களுக்கு வீழ்ந்தாா்.

முடிவில் ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரிகளுடன் 17 ஓட்டங்களுடனும் அா்ஷ்தீப் சிங் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பின்னர் 172 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆட வந்த இங்கிலாந்து 16.4 ஓவா்களில் 103 ஓட்டங்களிலேயே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியைத் தழுவியது.

இந்தியாவின் பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் ஒவ்வொருவரும் திணறியதைக் காணமுடிந்தது.

2022 உலகக் கிண்ண அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்ட இந்தியா, தற்போது அதே அணியை அதே அரையிறுதியில் வீழ்த்தி பதிலடி கொடுத்திருக்கிறது.

சனிக்கிழமை பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

இந்த உலகக் கிண்ண ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் வேறெந்த அணியாலும் தோற்கடிக்கப்படாத அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்