புதிய சாதனை படைத்ததன் மூலம் ஐசிசி உலகக் கிண்ண வரலாற்றில் இந்திய வீரர் விராத் கோஹ்லி இடம்பிடித்து உள்ளார்.
வெற்றி நாயகன் என்று போற்றப்படும் எம்எஸ் டோனிக்குக் கைகூடாத சாதனைகூட கோஹ்லிக்குச் சொந்தமாகி உள்ளது.
இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்த ஐசிசியின் நான்கு வெவ்வேறு வகையான உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதி ஆட்டங்களிலும் பங்கேற்ற பெருமை கோஹ்லிக்கு உண்டு.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் (2008), ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் (2011), சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய மூன்றின் இறுதி ஆட்டங்களிலும் பங்கேற்ற அவர், சனிக்கிழமை நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்திலும் பங்கேற்றார். இந்த நான்கு போட்டிகளிலும் இந்தியா வென்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் கோஹ்லி 59 பந்துகளில் 76 ஓட்டங்களைக் குவித்தது இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.
ஐசிசியின் நான்கு வெவ்வேறு விதமான உலகக் கிண்ண ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்ற இறுதி ஆட்டங்களில் கோஹ்லி பங்கேற்ற அதேவேளை டோனிக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை.
இதர மூன்று போட்டிகளிலும் அவர் பங்கேற்று இருந்தாலும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் அவர் பங்கேற்று விளையாடிய இந்திய அணி வெற்றிபெறவில்லை.
மற்றொரு அதிரடி வீரரான யுவராஜ் சிங்கிற்கும் அந்த வாய்ப்பு வேறுவிதமாக அமைந்தது.
தொடர்புடைய செய்திகள்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் (2000), டி20 உலகக் கிண்ணம் (2007), ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் (2011) ஆகிய போட்டிகளில் அவர் பங்கேற்ற அணி வென்றாலும் 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை இந்தியாவும் இலங்கையும் பகிர்ந்துகொண்டன.