கெல்சன்கர்கன்: யூரோ 2024 காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்தை வெளியேறாமல் காப்பற்றினார் ஜூட் பெலிங்ஹம்.
ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் ஐவன் ஷ்ரான்ஸ், எதிர்பாரா வண்ணம் சுலோவாக்கியாவை முன்னுக்கு அனுப்பினார். அதற்குப் பிறகு கோல் போட பெரிதும் சிரமப்பட்டது இங்கிலாந்து.
வரலாற்றில் முதன்முறையாக முக்கிய அனைத்துலகப் போட்டி ஒன்றில் சுலோவாக்கியா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நிலை இருந்தபோது, ஆட்டத்தின் 94வது நிமிடத்தில் அபாரமான முறையில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் பெலிங்ஹம்.
வெற்றியாளரைத் தீர்மானிக்க ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. கூடுதல் நேரம் தொடங்கி ஒரு நிமிடத்துக்குள் இங்கிலாந்து அணித் தலைவர் ஹேரி கேன், வெற்றி கோலைப் போட்டார்.
இனி காலிறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்தைச் சந்திக்கும் இங்கிலாந்து. சுலோவாக்கியாவை வென்றிருந்தாலும் தனது அணி விளையாடிய விதம் கண்டனத்துக்கு உள்ளாகும் என்பதை இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட் ஒப்புக்கொண்டார்.
“மேம்படவேண்டும் என்பது எங்களின் எண்ணம். அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால் அணியிடம் இருக்கும் துடிப்பையும் வெற்றி உணர்வையும் அனைவரும் பார்த்திருப்பர்,” என்றார் சவுத்கேட்.