லெய்ப்ஸிக்: ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் துருக்கியும் ஆஸ்திரியாவும் சிங்கப்பூர் நேரப்படி ஜூலை 3ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு மோதின.
இதில் 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்ற துருக்கி, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
ஆட்டம் தொடங்கி சில வினாடிகளிலேயே துருக்கிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
அதன் மூலம் ஆஸ்திரியாவின் பெனால்டி எல்லைக்குள் அனுப்பப்பட்ட பந்தைக் கண்ணிமைக்கும் நேரத்தில் வலைக்குள் சேர்த்தார் துருக்கியின் மெரியே டெரிமால்.
ஆட்டம் தொடங்கியதுமே ஏற்பட்ட எதிர்பாராப் பின்னடைவைக் கண்டு மனந்தளராமல் போராடியது ஆஸ்திரியா.
கோல் போட கிடைத்த சில பொன்னான வாய்ப்புகளை அது நூலிழையில் நழுவவிட்டது.
இடைவேளையின்போது, 1-0 எனும் கோல் கணக்கில் துருக்கி முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் துருக்கிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
அதைப் பயன்படுத்தி துருக்கி தனது இரண்டாவது கோலைப் போட்டது.
மெரியே டெமிரால் பந்தைத் தலையால் முட்டி கோல் போட்டார்.
ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பு மூலம் ஆஸ்திரியா கோல் போட்டது.
ஆனால் இறுதி வரை அக்குழுவால் ஆட்டத்தைச் சமன் செய்ய முடியாமல் போக, துருக்கி வாகை சூடியது.

