புதுடெல்லி: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி தாயகம் திரும்பியுள்ளது.
கடந்த சனிக்கிழமை போட்டி முடிவடைந்த நிலையில் பார்பேடாஸ் நகரில் வீசிய புயல் காரணமாக இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை (ஜூன் 4) அதிகாலை இந்திய அணி டெல்லி விமான நிலையத்திற்கு வந்தது. டெல்லி விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தங்கும் ஹோட்டல் வரை வழிநெடுகிலும் திரண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் விளையாட்டாளர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கிரிக்கெட் வீரர்கள் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.
மாலை மும்பையில் பிரம்மாண்டமான ஊர்வலமும் நடைபெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.மும்பை நரிமண் பாயின்ட்டில் இருந்து வான்கடே விளையாட்டு அரங்கம் வரை ஊர்வலம் நடைபெற்றதாக அவை குறிப்பிட்டன.
வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரசிகர்களுக்கு இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா சமூக ஊடகங்கள் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார்.

