தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூரோ 2024: ஜெர்மனிக்கு அதிர்ச்சி தந்து அசத்திய ஸ்பெயின்

2 mins read
9e7e9fb2-06da-4634-b183-21834452bb9b
ஸ்பெயினின் வெற்றி கோலைப் போடும் மிககெல் மெரினோ (சிவப்பு சீருடை). - படம்: ஏஎஃப்பி

ஸ்டுட்கார்ட்: யூரோ 2024 காற்பந்துப் போட்டியில் காலிறுதிச் சுற்றில் ஜெர்மனியை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது ஸ்பெயின்.

போட்டியை ஏற்று நடத்தும் ஜெர்மனி, காலிறுதிச் சுற்றில் வெளியேறும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சிறப்பாக விளையாடி வந்த அந்த அணியை ஸ்பெயின் அதிர்சசிக்கு உள்ளாக்கியது.

இரு அணிகளும் போட்டியில் இந்த ஆட்டத்துக்கு முன்பு கோல்களைக் குவித்து வந்தன.

ஆட்டத்தின் முதல் ஒரு மணிநேரத்தில் ஸ்பெயின் சிறப்பாக விளையாடியது. முற்பாதியாட்டத்தில் மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய டானி ஒல்மோ, பிற்பாதியாட்டம் தொடங்கி ஆறாவது நிமிடத்தில் ஸ்பெயினை முன்னுக்கு அனுப்பினார்.

பின்னர் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய ஜெர்மனி, ஆட்டம் முடிய சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது. 89வது நிமிடத்தில் ஃபுலோரியான் வியர்ட்ஸ் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

வெற்றியாளரைத் தீர்மானிக்க ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. அதில் கோல் ஏதும் விழாததால் பெனால்டிகளில் வெற்றியாளரைத் தீர்மானிக்கவேண்டிய நிலை எழும்போல் இருந்தது.

ஆனால் 119வது நிமிடத்தில் மற்றொரு மாற்று ஆட்டக்காரரான மிக்கெல் மெரினோ ஸ்பெயினின் வெற்றி கோலைப் போட்டு ஜெர்மனியைத் திக்குமுக்காடச் செய்தார். ஸ்பெயினின் முதல் கோலைப் போட்ட ஒல்மோ, சிறப்பான முறையில் பந்தை அனுப்பி மெரினோவின் கோலை உருவாக்கினார்.

ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒல்மோ, “மகிழ்ச்சி என்னைக் கவ்வியுள்ளது. எவ்வளவு அற்புதமான அணி இது,” என்று பெருமைபட்டார்.

“கால்களைவிட மனம்தான் என்றும் முக்கியத்துவம வாய்ந்தது. இன்னும் நான்கு நாள்களில அரையிறுதிச் சுற்று இருக்கிறது. அதனால் இதை அமைதியாக அனுபவிப்போம்,” என்றும் கூறினார் ஒல்மோ.

நிபுணத்துவ காற்பந்து வீரராகத் தனது கடைசி ஆட்டத்தில் விளையாடிய ஜெர்மனியின் டோனி குரூஸ், “நமது அணி (ஜெர்மனி) மேம்பட்டுள்ளதால் நாம் அனைவரும் பெருமைப்படலாம். காற்பந்து தேசமாக ஜெர்மனிக்கு மீண்டும் நம்பிக்கை எழ நான் உதவிக்கரம் நீட்டியதில் மகிழ்ச்சி கொள்கிறேன். வருங்காலத்தில் அணி வாகை சூடும் என்று நான் நம்புகிறேன். ஆனால், இன்று நாங்கள் வருத்தமாக இருக்கிறோம். இப்போட்டியில் மேலும் முன்னேற வேண்டும் என்று நாங்கள் நினைத்தது அதற்குக் காரணம்,” என்றார்.

மற்றொரு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகலை வெளியேற்றிய பிரான்சை அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயின் சந்திக்கும்.

குறிப்புச் சொற்கள்