தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூரோ 2024: 26 ஆண்டுகளில் முதன்முறையாக பெனால்டிகளில் வென்ற பிரான்ஸ்

2 mins read
fb0a781a-cceb-414b-bb22-e26786a55272
பெனால்டிகளில் போர்ச்சுகலை வென்ற பிறகு கொண்டாடும் பிரான்சின் தியோ ஹெர்னாண்டெஸ் (இடது), மைக் பீட்டர்சன் மைன்யன். - படம்: இபிஏ
multi-img1 of 2

ஹாம்பர்க்: பிரான்ஸ் காற்பந்து அணி, 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக முக்கியப் போட்டி ஒன்றில் பெனால்டிகளில் வென்றுள்ளது.

யூரோ 2024 போட்டியின் காலிறுதிச் சுற்றில் பிரான்ஸ், போர்ச்சுகலை பெனால்டிகளில் 5-3 எனும் கோல் கணக்கில் வென்றது. அதற்கு முன்பு ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.

கடைசியாக பிரான்ஸ் பெனால்டிகளில் வென்றபோது, அந்த அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளரான டிடியே டே‌‌ஷோம் விளையாட்டாளராக இருந்தார்.

“எனக்குத் தெரியும். நான் அங்கு இருந்தேன்,” என்று1998ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இத்தாலியை பெனால்டிகளில் வென்ற பிரெஞ்சு அணியில் தான் விளையாட்டாளராக இருந்ததை நினைவுகூர்ந்தார் டே‌‌ஷோம். அந்த முறை பிரான்ஸ், உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

அதற்கு 26 ஆண்டுகள் கழித்துதான் அதே டே‌ஷோம் பயிற்றுவிப்பாளராக இருக்கும்போது முக்கியப் போட்டி ஒன்றில் பிரான்ஸ் மீண்டும் பெனால்டிகளில் வென்றிருக்கிறது.

எனினும், ஆட்டத்தில் வெற்றிபெற்றிருந்தாலும் பிரான்ஸ் இப்போட்டியில் இதுவரை போதுமான கோல்களைப் போடாதது குறித்து கவலை நிலவுகிறது. யூரோ 2024ல் பிரான்ஸ் இதுவரை ஃபிரீ கிக், பெனால்டி அல்லது எதிர் அணியின் வீரர்கள் சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதன் மூலம்தான் மூன்றே கோல்களைப் போட்டுள்ளது.

போர்ச்சுகல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்த அணியின் 39 வயது நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இனி தேசிய அணியில் இனி விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டம் முடிந்த பிறகு சோகமாகக் காணப்பட்ட ரொனால்டோ.
ஆட்டம் முடிந்த பிறகு சோகமாகக் காணப்பட்ட ரொனால்டோ. - படம்: ஏஎஃப்பி

இதுகுறித்து ரொனால்டோ இதுவரை கருத்துரைக்கவில்லை. முன்பைப்போல் சிறப்பாக விளையாட சிரமப்பட்ட அவர், யூரோ 24 போட்டியில் கோல் ஏதும் போடவில்லை.

பெனால்டிகளில் மட்டும்தான் ரொனால்டோ கோல் போட்டார்.

போர்ச்சுகலுக்கு மொத்தம் 130 கோல்களைப் போட்டு அசத்தியவர் ரொனால்டோ.

குறிப்புச் சொற்கள்