தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிண்ணத்தை நோக்கி பயணத்தைத் தொடரும் நெதர்லாந்து

1 mins read
5b880fd2-fc70-4a3f-9991-2677ed9455dd
அரையிறுதிக்குத் தகுதி பெற்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நெதர்லாந்து ஆட்டக்காரர் வோட் வெகோர்ஸ்ட் - படம்: ஏஎஃப்பி

பெர்லின்: ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி ஜூலை 7ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் துருக்கியை 2-1 எனும் கோல் கணக்கில் நெதர்லாந்து தோற்கடித்தது.

முற்பாதி ஆட்டத்தில் துருக்கி சிறப்பாக விளையாடியது.

ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் துருக்கியின் சமேட் அகேய்தீன் தலையால் முட்டிய பந்து வலையைத் தொட்டது.

இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் துருக்கி முன்னிலை வகித்தது.

ஆட்டத்தை எப்படியும் தன் வசப்படுத்திக்கொண்டு வெற்றிக் கனியைச் சுவைத்திட வேண்டும் என்ற முனைப்புடன் பிற்பாதி ஆட்டத்தில் நெதர்லாந்து மிகக் கடுமையாகப் போராடியது.

அதற்குப் பலன் அளிக்கும் வகையில் ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் அக்குழுவின் ஸ்டெஃபான் டி விரிஜ் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார்.

ஆறு நிமிடங்கள் கழித்து, நெதர்லாந்தின் நட்சத்திர ஆட்டக்காரர் கோடி கேக்போ தந்த நெருக்குதலின் காரணமாக துருக்கியின் தற்காப்பு ஆட்டக்காரரான மெர்ட் முல்தூர் தவறுதலாகச் சொந்த கோல் போட்டார்.

இதுவே நெதர்லாந்தின் வெற்றி கோலாக அமைந்தது.

ஆட்டம் முடிந்ததும் நெதர்லாந்து ஆட்டக்காரர்கள் கொண்டாட்ட மழையில் நனைய, துருக்கிய ஆட்டக்காரர்கள் சோகமே உருவாகத் திடலிலிருந்து வெளியேறினர்.

சிங்கப்பூர் நேரப்படி ஜூலை 11ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தும் இங்கிலாந்தும் மோதுகின்றன.

குறிப்புச் சொற்கள்