மும்பை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வெற்றியாளர் விருது தொடர் மற்றும் உலக டெஸ்ட் வெற்றியாளர் இறுதிச் சுற்றில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ரோகித் செயல்படுவார் என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரில் ரோகித் தலைமையிலான இந்திய அணி வெற்றியாளர் பட்டம் பெற்றது. இந்திய அணிக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. இந்த தொடருடன் அனைத்துலக டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் அறிவித்தார். அவருக்கு மாற்றாக இந்திய டி20 அணியின் முழுநேர கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் எனத் தெரிகிறது.
“டி20 உலகக் கோப்பையில் வெற்றியாளர் பட்டம் பெற்றுவிட்டோம். வெற்றியாளர் விருது மற்றும் உலக டெஸ்ட் வெற்றியாளர் போட்டிதான் நமது அடுத்த இலக்கு. இந்த இரண்டு தொடர்களிலும் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான அணி வெற்றியாளர் பட்டம் வெல்லும் என்பதை உறுதியாக நான் நம்புகிறேன்.
“கடந்த ஓராண்டு காலத்தில் ரோகித் தலைமையிலான இந்திய அணி மூன்று ஐசிசி தொடர்களின் இறுதியில் விளையாடி உள்ளது. இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் வெற்றியாளர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை நம்மால் வெல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜ்கோட்டில் நான் சொன்னது போல டி20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ளோம்,” என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். 2023-25க்கான உலக டெஸ்ட் வெற்றியாளர் விருது போட்டியில் இந்திய அணி இப்போது முதல் இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெற்றியாளர் விருது தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்தச் சூழலில் ஜெய் ஷா இதனை தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மாவுக்கு தற்போது 37 வயதாகிறது. இந்தச் சூழலில் அணியின் வேகத்தை அப்படியே தொடரும் நோக்கில் ஜெய் ஷா இதனை தெரிவித்துள்ளார் என அறியப்படுகிறது.