மியூனிக்: யூரோ 2024 காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் மிகச் சிறப்பாக விளையாடிவந்துள்ள ஸ்பெயினும் கோல் போடப் பெரிதும் சிரமப்பட்டுள்ள பிரான்சும் சந்திக்கவுள்ளன.
இப்போட்டியில் ஸ்பெயினும் ஜெர்மனியும்தான் ஆக அதிக கோல்களைப் போட்டுள்ளன. காலிறுதிச் சுற்றில் ஜெர்மனியை வெளியேற்றியது ஸ்பெயின்.
அதேவேளை, நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் கிலியோன் எம்பாப்பே அணித்தலைவராக இருக்கும் பிரான்ஸ், இப்போட்டியில் அதிக கோல்களைப் போடாமல் தத்தளித்தபடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. எனினும், பிரான்சின் தற்காப்பு ஆட்டம் அபாரமாக இருந்து வந்துள்ளது.
யூரோ 2024ல் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கிறது பிரான்ஸ்.
ஸ்பெயின் இதுவரை போட்டியில் விளையாடிய ஐந்து ஆட்டங்களிலும் வென்றுள்ளது. பெனால்டிகளில் வெற்றிபெற்ற அணிகளைக் கருத்தில்கொள்ளாவிட்டால் யூரோ வரலாற்றில் எந்த அணியும் ஐந்து ஆட்டங்களுக்கு மேல் வென்றதில்லை.
ஸ்பெயினின் தேர்ச்சிக்கு அதன் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் டெ ல ஃபுவென்டேயின் ஊக்கம் தரும் மனப்போக்கு ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அவர், அடிக்கடி தனது அணியைப் பாராட்டி ஊக்கமளித்து வருகிறார்.
ஸ்பெயினின் தற்காப்பு வீரரான மார்க் குக்குரேயா, “வயதான விளையாட்டாளர்கள், இளம் விளையாட்டாளர்கள் என எங்களிடம் இரு வகையான வீரர்களும் இருக்கின்றனர். அந்த அம்சம் அணியை விறுவிறுப்பானதாக விளங்கச் செய்கிறது. குடும்பம் போல் இருப்பதுதான் முக்கியம். நம்மிடம் நட்சத்திரங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சிறப்பான அணியாக இருக்கிறோம்,” என்றார்.
ஸ்பெயினின் இளம் வீரர்களான லமீன் யமால், நிக்கோ வில்லியம்ஸ் ஆகியோர் அணி சிறப்பாகச் செய்ய உறுதுணையாக இருந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கத்தாரில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் ஆக அதிக கோல்களைப் போட்டு அசத்திய பிரான்சின் நிலை யூரோ 2024ல் நேர்மாறாக இருந்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டியில் எட்டு கோல்களைப் போட்ட எம்பாப்பே, இப்போட்டியில் ஒருமுறை மட்டும்தான் கோல் போட்டிருக்கிறார். அதுவும் பெனால்டியில் விழுந்தது.
பிரான்ஸ் பயிற்றுவிப்பாளர் டிடியே டேஷோம், “தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினால் ஆட்டங்களில் வெல்வது கூடுதல் எளிதாக இருக்கும். அதேவேளை, தற்காப்பு ஆட்டம் வலுவாக இல்லாவிட்டால் யூரோ, உலகக் கிண்ணம் போன்ற முக்கியமான போட்டிகளில் அதிக தூரம் போகமுடியாது,” என்று தனது அணியைத் தற்காத்துப் பேசினார்.
சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை (ஜூலை 10) அதிகாலை மூன்று மணிக்கு ஸ்பெயினும் பிரான்சும் மோதும்.