சென்னை: பாரிஸ் ஒலிம்பிக்கில் இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லும் என தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ள இந்திய மேசைப் பந்து நட்சத்திரம் சரத் கமல் தெரிவித்தார்.
மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் வரும் 26ஆம்தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவின் தொடக்க நாளில் இந்திய தேசியக் கொடியை, 4 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற மேசைப் பந்து நட்சத்திர வீரரான சரத் கமல் ஏந்திச் செல்ல உள்ளார். இந்நிலையில் சென்னையில் ஜூலை 8ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சரத் கமல் கூறியதாவது:
“ஒலிம்பிக் போட்டிக்கு இம்முறை சிறந்த முறையில் தயாராகி உள்ளேன். நான் மட்டும் அல்ல இந்திய மேசைப் பந்து அணியில் உள்ள அனைவருமே வெளிநாடுகளில் விளையாடி பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அணிகள் பிரிவில் முதன்முறையாக விளையாட உள்ளோம். இதனால் இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். முக்கியமாக இரட்டையர் ஆட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். ஏனெனில் ஒலிம்பிக்கை பொறுத்தவரையில் மேசைப் பந்து விளையாட்டில் முதல் ஆட்டமே இரட்டையர் ஆட்டமாகத்தான் இருக்கும்.
அணிகள் பிரிவில் மொத்தம் 16 அணிகளே பங்கேற்கும். இதனால் கடுமையான போட்டி இருக்கும். சீனா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் கடும் சவால் அளிக்கக்கூடியவை. ஆசிய அணிகளுக்கு எதிராக நாம் சிறப்பாக விளையாடி உள்ளோம். இம்முறை குழு பிரிப்பு எப்படி அமைகிறது என்று பார்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மேசைப் பந்து விளையாட்டில் நாம் சீரான முன்னேற்றம் கண்டுள்ளோம். இதற்கு சான்று உலகத் தரவரிசையில் நாம் 11வது இடத்தில் இருப்பதுதான்.
மேலும் ஒற்றையர் பிரிவில் நான் 40வது இடங்களுக்குள் உள்ளேன். மகளிர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா, மணிகாபத்ரா ஆகியோர் 30 இடங்களுக்குள் உள்ளனர். ஒவ்வொரு முறையும் பதக்கம் வெல்ல போராடுகிறோம். இம்முறையும் அதை தொடர்வோம். தனிப்பட்ட முறையில் இம்முறை கால் இறுதி சுற்றை எட்ட வேண்டும் என இலக்கு வைத்துள்ளேன். பதக்கம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஒட்டுமொத்தமாக இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கங்களைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கையும் உள்ளது,” என்று சரத் கமல் கூறினார்.

