மியூனிக்: ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி ஜூலை 10ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிரான்சை 2-1 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் தோற்கடித்தது.
ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் போட்டு முன்னிலை வகித்தது.
கோலோ முவானி தலையால் முட்டிய பந்து வலைக்குள் புகுந்தது.
மனந்தளராமல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய ஸ்பெயினுக்குக் கைமேல் பலன் கிடைத்தது.
ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் பிரெஞ்சு பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து ஸ்பெயினின் 16 வயது லமின் யமால் அனுப்பிய பந்து, மிக அழகாக வளைந்துச் சென்று வலையைத் தொட்டது.
இந்த அபார கோலைக் கண்டு விளையாட்டரங்கில் கூடியிருந்தோர் மட்டுமல்ல, ஆட்டத்தை உலகெங்கும் தொலைக்காட்சிகளில் நேரலையாகப் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் பிரமித்தனர்.
ஆட்டத்தைச் சமன் செய்த பிறகும் ஸ்பெயினின் கோல் பசி அடங்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் ஸ்பெயினின் டானி ஓல்மோ அனுப்பிய பந்து பிரான்சின் தற்காப்பு ஆட்டக்காரரின் காலில் பட்டு வலைக்குள் புகுந்தது.
இதுவே ஸ்பெயினின் வெற்றி கோலாக அமைந்தது.
ஆட்ட நாயகனாக ஸ்பெயினின் பதின்மவயது நட்சத்திரம் லமின் யமால் தேர்வு செய்யப்பட்டார்.
“இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இனி அதில் வெற்றி பெற்று கிண்ணத்தை ஏந்துவதில்தான் எங்கள் முழு கவனம் இருக்கும்,” என்றார் யமால்.