பெர்லின்: இங்கிலாந்து காற்பந்து அணி, 58 ஆண்டுகளாக முக்கிய அனைத்துலகப் போட்டி ஒன்றில் கிண்ணத்தை வெல்லவில்லை; ஏக்கத்தை இவ்வாண்டு யூரோ 2024 போட்டியில் தீர்த்துவைக்கும் இலக்குடன் அந்த அணி இருக்கிறது.
கடைசியாக 1966ல் உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து. அதற்கு முன்பும் பின்னும் அது கிண்ணம் ஏதும் வெல்லவில்லை.
தொடர்ந்து இரண்டாவது முறையாக இங்கிலாந்து யூரோ இறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ளது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற யூரோ 2020 போட்டியின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்து, இத்தாலியிடம் பெனால்டிகளில் தோல்வியடைந்தது.
சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை (ஜூலை 15) அதிகாலை மூன்று மணிக்கு அந்த அணி, யூரோ 2024 இறுதியாட்டத்தில் ஸ்பெயினைச் சந்திக்கவுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோட்டைவிட்டதை மீண்டும் கவ்விக்கொள்ள இங்கிலாந்துக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
2022 உலகக் கிண்ணம், யூரோ 2018, 2020 போட்டிகளில் இங்கிலாந்தை நன்கு மேம்படச் செய்த பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட், இம்முறை கிண்ணத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறார்.
யூரோ 2024ன் முதல் சுற்றில் சி பிரிவில் அவ்வளவு சோபிக்காத இங்கிலாந்து, போட்டி செல்லச் செல்ல படிப்படியாக மேம்பட்டிருக்கிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதிச் சுற்று, அரையிறுதிச் சுற்று ஆகியவற்றில் இங்கிலாந்து வீரர்களான ஹேரி கேன், ஃபில் ஃபோடன், கோல் பாமர் ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
அவர்களோடு சக நட்சத்திரங்கள் ஜூட் பெலிங்ஹம், புக்காயோ சாக்கா, ஒலி வாட்கின்ஸ் ஆகியோரும் முக்கிய கோல்களைப் போட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தனர்.
வரலாற்றில் முதன்முறையாக அடுத்தடுத்த யூரோ போட்டிகளில் இறுதியாட்டத்துக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து.
தொடர்புடைய செய்திகள்
ஸ்பெயின், இப்போட்டியில் இதுவரை விளையாடிய ஆறு ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. மேலும்,மொத்தம் 13 கோல்களைப் போட்டு மூன்று கோல்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தியிருக்கிறது.
பிரான்சுக்கு எதிரான அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் முதல் கோலைப் போட்டார் சனிக்கிழமையன்று (ஜூலை 13) 17 வயதைத் தொட்ட லமீன் யமால். யூரோ போட்டிகளில் விளையாடியிருக்கும் ஆக இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்ற யமால், போட்டியில் கோல் போட்ட ஆக இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
அதிக பரபரப்பின்றி செயல்படும் ஸ்பெயின் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் டெ லா ஃபுவென்டே, வெற்றிபெறுவதைப் பழக்கமாகக் கொண்டவர் எனச் சொல்லப்படுகிறது. அவரின் தலைமையில் பல இளம் வீரர்களுடன் துடிப்புடன் விளையாடி பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டுவந்துள்ள ஸ்பெயின், இறுதியாட்டத்தில் இங்கிலாந்தை வென்றால் நான்காவது முறையாக யூரோ கிண்ணத்தைக் கைப்பற்றிவிடும்.
இதுவரை எந்த அணியும் நான்கு முறை யூரோ போட்டிகளில் வாகை சூடியதில்லை.