பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இவ்வாண்டு அரங்கேறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளில் மேலும் ஒரு பிரிவில் போட்டியிடவுள்ளார் சிங்கப்பூர் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா.
உலகத் தரவரிசையில் தான் பிடித்த இடத்தின்படி சாந்தி, ஒலிம்பிக்கில் பெண்கள் 100 மீட்டர் பந்தயத்தில் போட்டியிடத் தகுதிபெற்றுள்ளார். முன்னதாக, ஒலிம்பிக் விளையாட்டுகளின் பெண்கள் 200 மீட்டர் பிரிவில் போட்டியிடத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூர் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
ஒலிம்பிக்கில் 100, 800, நெடுந்தொலைவோட்டப் பிரிவுகளில் போட்டியிட மூன்று வழிகளில் தகுதிபெறலாம். சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓடி முடிப்பது, உலகத் தரவரிசை, குறைவான விளையாட்டாளர்களே தகுதிபெற்ற தேசங்களிலிருந்து கூடுதலானோருக்கு வாய்ப்பு வழங்கும் பன்முக வாய்ப்புத் திட்டம் (யுனிவர்சேலிட்டி ஸ்பாட்ஸ்) ஆகிய மூன்றில் ஒன்றின் மூலம் வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டுகளின் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் போட்டியிடத் தகுதிபெறலாம்.
2021ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குப் பிறகுதான் உலகத் தரவரிசையில் பிடிக்கும் இடத்தைப் பொறுத்து ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெறும் முறை தொடங்கப்பட்டது. அதன்வழி ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள முதல் சிங்கப்பூரர் சாந்தி பெரேரா.
பெண்கள் 100 மீட்டர் பிரிவு தரவரிசையின் முதல் 56 இடங்களைப் பிடிப்போர் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தகுதிபெறுவர். தரவரிசையில் சாந்தி 42வது இடத்தைப் பிடித்தார். இப்பிரிவில் 11.20 விநாடிகள் எடுத்துக்கொண்டு அவர் தேசிய சாதனை படைத்திருக்கிறார்.
“ஒலிம்பிக் பந்தயங்களில் வேகமாக முடிப்பதுடன் அனுபவித்து நம்மால் முடிந்தவரை சிறப்பாகச் செய்வோம் என்று பயிற்றுவிப்பாளரும் (லூயிஸ் குன்யா) நானும் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்றார் சாந்தி.