தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோப்பா அமெரிக்கா: வரலாறு படைக்கத் துடிக்கும் அர்ஜென்டினாவை தகர்க்க எண்ணும் கொலம்பியா

2 mins read
0e38eb66-f11d-4634-8c8d-79f687b4433a
கோப்பா அமெரிக்கா அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் கொலம்பியாவின் அங்கெலா பாரன் (இடது), உருகுவேயின் ஹோசே ஹிமெனெஸ். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

மயாமி: இவ்வாண்டின் கோப்பா அமெரிக்கா கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் நடப்பு வெற்றியாளரான அர்ஜென்டினாவுடன் மோதவுள்ளது கொலம்பியா.

லத்தீன் அமெரிக்க தேசிய அணிகள், அழைப்பு விடுக்கப்பட்ட ஓரிரு வட அமெரிக்க மற்றும் மற்ற கண்டங்களைச் சேர்ந்த தேசிய அணிகள் ஆகியவற்றுக்கான இப்போட்டியில் 16வது முறையாகக் கிண்ணத்தை வெல்லும் இலக்கைக் கொண்டுள்ளது அர்ஜென்டினா.

அர்ஜென்டினா, உருகுவே இரண்டும் 15 முறை கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்றுள்ளன. இந்த இரு அணிகளும்தான் இக்கிண்ணத்தை ஆக அதிக முறை வென்றவை.

இப்போது அதையும் தாண்டி 16 முறை கோப்பா கிண்ணத்தை வென்ற ஒரே அணி என்று பெயர் பதிக்கும் நோக்கில் இருக்கிறது லயனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா. மேலும், அவ்வாறு நிகழ்ந்தால் அடுத்தடுத்த மூன்று முக்கியப் போட்டிகளில் வாகை சூடிய முதல் லத்தீன் அமெரிக்க அணி என்ற பெருமையையும் அர்ஜென்டினா பெறும்.

2021ஆம் ஆண்டு கோப்பா கிண்ணத்தை வென்ற அது, 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தையும் கைப்பற்றியது.

எனினும், கொலம்பியாவை சாதாரணமாக எடைபோட முடியாது. அரையிறுதிச் சுற்றில் உருகுவேயை 1-0 எனும் கோல் கணக்கில் வென்ற கொலம்பியா, கடந்த 28 ஆட்டங்களில் தோல்வியடையவில்லை. இது, கொலம்பியாவில் தேசிய சாதனையாகும்.

நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டுள்ள அர்ஜென்டினாதான் கிண்ணத்தை வெல்லும் என்ற உணர்வு பரவலாக இருந்து வருகிறது. அதேவேளை, ஆட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கு மற்றொன்று ஈடுகொடுத்து விளையாடும் என்றும் கருதப்படுகிறது.

இளம் வயதில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி பின்னர் களையிழந்துபோன கொலம்பிய அணித் தலைவர் ஹாமெஸ் ரொட்ரிகெஸ், இந்த கோப்பா அமெரிக்கா போட்டியில் மீண்டும் ஆற்றலை வெளிப்படுத்தி மீண்டுவந்துள்ளார். அவரின் தலைமையில் கொலம்பியா, அர்ஜென்டினாவை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும் சாத்தியமும் இருக்கிறது.

கொலம்பியாவின் ஹாமெஸ் ரொட்ரிகெஸ்.
கொலம்பியாவின் ஹாமெஸ் ரொட்ரிகெஸ். - படம்: ஏஎஃப்பி

அமெரிக்காவில் அரங்கேறும் கோப்பா அமெரிக்கா போட்டியின் இறுதியாட்டம் சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை (ஜூலை 15) காலை எட்டு மணியளவில் மயாமி நகரில் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்