பெர்லின்: ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி மகுடம் சூடியது ஸ்பெயின்.
இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி ஜூலை 15ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றது.
முற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் மிகுந்த கவனத்துடன் விளையாடின.
ஸ்பெயின், பெரும்பாலான நேரங்களில் பந்தைத் தன் வசம் வைத்திருந்தது.
இருப்பினும் இடைவேளையின்போது ஆட்டம் கோலின்றி சமநிலையில் இருந்தது.
பிற்பாதி ஆட்டம் தொடங்கி இரண்டு நிமிடங்களில் ஸ்பெயின் கோல் போட்டது.
பந்துடன் மின்னல் வேகத்தில் முன்னேறிய ஸ்பெயினின் பதின்மவயது நட்சத்திரம் லமின் யமால், அதைக் கச்சிதமாக சக ஆட்டக்காரர் நிக்கோ வில்லியசிடம் அனுப்பினார்.
நிக்கோ வில்லியம்ஸ் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து, ஸ்பெயின் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
அதைச் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்தின் தற்காப்பு திக்குமுக்காடியது.
இந்நிலையில், ஹேரி கேனுக்குப் பதிலாக ஓலி வாட்கின்ஸ் களமிறங்கினார்.
இவர் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றி கோலைப் போட்டவர்.
வாட்கின்சைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் கோல் பால்மரும் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கினார்.
இது உடனடியாக கைமேல் பலனைத் தந்தது.
ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் ஸ்பெயினின் பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து பால்மர் அனுப்பிய பந்து அனைவரையும் கடந்து சென்று வலைக்குள் புகுந்து ஆட்டத்தைச் சமன் செய்தது.
ஆனால் ஆட்டம் முடிய கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது மிக்கேல் ஒயார்ஸபல் ஸ்பெயினின் இரண்டாவது கோலைப் போட்டார்.
ஆட்டத்தை எப்படியும் சமப்படுத்திவிட வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடியது இங்கிலாந்து. இதற்கு முந்தைய ஆட்டங்களில் கடைசி நேரங்களில் இங்கிலாந்து கோல்கள் போட்டிருந்தது.
இறுதி ஆட்டத்திலும் அது நடந்திருக்கும்.
ஆட்டம் முடியும் கட்டத்தில் இங்கிலாந்து குழு வலை நோக்கி அனுப்பிய பந்தை ஸ்பெயின் கோல்காப்பாளர் தட்டிவிட்டார்.
ஆனால் அது மீண்டும் இன்னொரு இங்கிலாந்து ஆட்டக்காரரிடம் செல்ல அதை அவர் வலை நோக்கி தலையால் முட்டினார்.
இம்முறை கோல் கோட்டில் நின்றுகொண்டிருந்த ஸ்பானிய ஆட்டக்காரர் டேனி ஓல்மோ அதைத் தலையால் முட்டி வெளியே அனுப்பினார்.
இவ்வாறு இறுதி வரை ஸ்பெயின் தனது முன்னிலையை மிகச் சிறப்பான முறையில் தக்கவைத்துக்கொண்டு கிண்ணத்தை வென்றது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்று தோல்வியின் பிடியில் சிக்கியது இங்கிலாந்து.
ஐரோப்பியக் கிண்ணம் அதற்குத் தொடர்ந்து சிம்ம சொப்பனமாக உள்ளது.

