மும்பை: அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடத் தொடங்கி கடந்த சனிக்கிழமையுடன் (ஜூலை 13) 50 ஆண்டு நிறைவுபெற்று உள்ளது.
இந்திய அணி 1974 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றது. அந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அது களமிறங்கியது.
இந்திய அணியின் தலைவராக அஜித் வடேகர் இருந்தார். சுனில் கவாஸ்கர், ஃபரூக் இன்ஜினியர், பிரிஜேஷ் படேல், குண்டப்பா விஸ்வநாத், மதன்லால், பிஷன் பேடி வெங்கட்ராகவன் போன்ற வீரர்கள் அந்த அணியில் இருந்தனர்.
அப்போது ஒருநாள் போட்டி 55 ஓவர்களாக விளையாடப்பட்டது. இந்திய அணி முதலில் களமிறங்கி பந்தடித்து 265 ஓட்டங்களை எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுனில் கவாஸ்கர் 35 பந்துகளில் 28 ஓட்டங்களை எடுத்தார். அதில் மூன்று பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும்.
அதிகபட்சமாக பிரிஜேஷ் படேல் 82 ஓட்டங்களைக் குவித்தார். 78 பந்துகளைச் சந்தித்த அவர், 8 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் விளாசினார்.
அந்த இலக்கைத் துரத்தி விளையாடிய இங்கிலாந்து அணி, 51.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
முதல் ஆட்டத்திலேயே தோல்வியைத் தழுவினாலும் இந்திய அணியினர் சிறப்பாக விளையாடியதாக, அப்போது இந்திய அணியில் இடம்பெற்று இருந்த சையது அபித் அலி, 82, கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒருநாள் போட்டி என்பது எங்களுக்குப் புதிதாக இருந்தபோதிலும் எல்லாரும் அற்புதமாக விளையாடி 250 ஓட்டங்களுக்கு மேல் குவித்தோம்.
“புதிய முறையிலான விளையாட்டை எப்படி அணுகுவது என்பதில் எங்களில் பலருக்கு சந்தேகங்கள் இருந்தன. இருப்பினும், பெரும்பாலானோர் விரைவிலேயே அந்தப் புதிய முறைக்குப் பழகிவிட்டனர்,” என்றார் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் திரு அபித்.
அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் போட்டி 1971 ஜனவரியில் அறிமுகம் கண்டது.

