புதுடெல்லி: அகில இந்திய காற்பந்து சம்மேளனத்தின் சார்பில் விருது வழங்கும் விழா டெல்லியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) இரவு நடைபெற்றது.
2023-24ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த ஆண், பெண் காற்பந்து வீரர்களுக்கான விருதுகள் அந்த விழாவில் வழங்கப்பட்டன.
சிறந்த காற்பந்து வீரர் விருதை மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த லாலியன்ஜூலா சாங்தே பெற்றார். மும்பை சிட்டி காற்பந்து கிளப்பிற்காக விளையாடும் அந்த 27 வயது வீரர் களத்தில் காட்டும் வேகமும் விவேகமும் கிளப்பின் வெற்றிக்கு வழிவகுப்பதாகப் பாராட்டப்பட்டார்.
சிறந்த காற்பந்து வீராங்கனைக்கான விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்துமதி கதிரேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடலூரைச் சேர்ந்த அந்த 30 வயது வீராங்கனை சென்னை காவல்துறையில் பணியாற்றுகிறார்.
மகளிர் காற்பந்து லீக் போட்டியில் ஒடிசா காற்பந்து கிளப்பிற்காக விளையாடி முக்கிய தருணத்தில் ஐந்து கோல்களைப் புகுத்தி அணியின் வெற்றிக்கு அவர் வழிவகுத்தார்.
இந்துமதி தொடர்ந்து துடிப்புடன் விளையாடி வருவதைப் பாராட்டி சிறந்த வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது.