தம்புலா: இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானைச் சந்தித்தது.
பூவா தலையா வென்று பந்தடிப்பைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 108 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஸித்ரா அமீன் 25 ஓட்டங்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, துபா ஹாசன் மற்றும் ஃபாத்திமா சனா அதிகபட்சமாக தலா 22 ஓட்டங்கள் எடுத்தனர். இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
109 ஓட்ட இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கி, அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தனர். இந்திய அணி 85 ஓட்டங்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 31 பந்துகளில் 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் தயாளன் ஹேமலதா களமிறங்கினார். பாகிஸ்தான் வீராங்கனை நஸ்ரா சாந்து பந்துவீச்சில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்து அசத்தினார் ஹேமலதா. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா 29 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 14.1 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை இந்திய மகளிரணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

