பாரிஸ்: பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான தரநிலைச் சுற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தென் கொரிய வீராங்கனை லிம் சி-ஹியோன், தனிநபர் தரநிலைச் சுற்றில் உலகச் சாதனை படைத்துள்ளார்.
மகளிர் தனிநபர் பிரிவில் பங்கேற்ற லிம், 720 புள்ளிகளுக்கு 694 புள்ளிகளைப் பெற்று முதல் இடம் பிடித்தார். இதன் மூலம் முந்தைய உலகச் சாதனை மற்றும் ஒலிம்பிக் சாதனையை அவர் தகர்த்தார்.
இதற்கு முன்னர் 72 முறை அம்புகளை எய்தும் தரநிலைச் சுற்றில் தென் கொரியாவின் அன் சான் 692 புள்ளிகளை எடுத்தது உலகச் சாதனையாக இருந்தது. அதனை 2019 உலக வில்வித்தை வெற்றியாளர் போட்டியில் அவர் படைத்திருந்தார். தற்போது அதை லிம் முந்தியுள்ளார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது பங்கேற்பை அவர் உரக்கச் சொல்லியுள்ளார். இந்த முறை பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீராங்கனைகளில் ஒருவராக லிம் சி-ஹியோன் பார்க்கப்படுகிறார்.
இதே சுற்றில் 688 புள்ளிகளை மற்றொரு தென் கொரிய வீராங்கனை நம்-சுயோன் பெற்றார். அதன் மூலம் அவர் இரண்டாம் இடம் பிடித்தார். மூன்றாம் இடத்தை சீனாவின் யங், 673 புள்ளிகளுடன் பெற்றிருந்தார். ஒட்டுமொத்தமாக 2046 புள்ளிகளைப் பெற்று இதில் முதல் இடம்பிடித்துள்ளது தென் கொரியா.
இதில் இந்தியாவின் அங்கிதா பகத் 666 புள்ளிகளுடன் 11வது இடம்பிடித்திருந்தார். பஜன் கவுர் 22, மற்றும் தீபிகா குமாரி 23வது இடங்களைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.