ஹராரே: கிரிக்கெட் போட்டி முடிவில் ஒருபக்கம் வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் இறங்க, இன்னொரு பக்கம் ஆட்ட நடுவர்களில் ஒருவர் வலியால் துடித்தார்.
அதற்குக் காரணம், வெற்றிக்கான இறுதி ஓட்டத்தை அடித்த பந்தடிப்பாளர் உணர்ச்சிப்பெருக்கில் தமது மட்டையை வீச, அது நடுவரின் காலைப் பதம்பார்த்தது.
இச்சம்பவம் ஸிம்பாப்வே நாட்டில் நிகழ்ந்தது.
தேசிய பிரிமியர் லீக் என்ற 45 ஓவர் போட்டித் தொடரில், கடந்த ஞாயிறன்று (ஜூலை 28) நடந்த போட்டியில் சோகோ ரேஞ்சர்ஸ் - ரெயின்போ 1 கிரிக்கெட் மன்ற அணிகள் மோதின.
முதலில் பந்தடித்த ரேஞ்சர்ஸ் அணி 229 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இலக்கை விரட்டிய ரெயின்போ 1 அணி, கடைசிப் பந்தில் நான்கு ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலை.
ஸிம்பாப்வே தேசிய அணி வீரர் ரயன் பர்ல் வீசிய அப்பந்தை சிக்சருக்குத் தூக்கியடித்தார் ஃபிரான்சிஸ் சேண்டே.
இதனால் பெருமகிழ்ச்சி அடைந்த சேண்டே, உற்சாக மிகுதியில் தமது மட்டையைத் தூக்கி வீசினார். அது பந்துவீச்சாளரையும் தாண்டி, கீழே விழுந்து, எகிறிச் சென்று நடுவரின் காலைத் தாக்கியது.
தொடர்புடைய செய்திகள்
பறந்து வந்த மட்டை தம்மைத் தாக்கியதால் அதிர்ச்சி அடைந்த நடுவர், வலியால் நொண்டியவாறே கையை உயர்த்தி ‘சிக்ஸ்’ என அறிவித்தார்.
அதனைக் கவனிக்காத சேண்டே, ஆடுகளத்திலேயே நடனமாட, வெளியிலிருந்து ஓடிவந்த சக அணியினரும் அவருடன் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இறங்கினர்.