பாரிஸ்: இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கப் பதக்கங்களைக் குவித்ததுடன் பலமுறை ஒலிம்பிக் சாதனையையும் முறியடித்துள்ளார் பிரான்ஸ் நீச்சல் வீரர் லியோன் மாஹ்ரன்.
200 மீட்டர் ஆண்கள் தனிநபர் கலப்பு பாணி நீச்சலில் தனக்கு அடுத்தபடியாக முடித்த வீரரைவிட ஒரு விநாடி குறைவான நேரத்தில் முடித்தார் மாஹ்ரன். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 54.06 விநாடிகள்.
பின்னர் 400 மீட்டர் தனிநபர் கலப்பு பாணி நீச்சல், 200 மீட்டர் நெஞ்சு நீச்சல், 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் ஆகியவற்றிலும் மாஹ்ரன் தங்கப் பதக்கம் வென்றார். நான்கு பிரிவுகளிலும் ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார்.
ஓராண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளில் நான்கு தனிநபர் நீச்சல் போட்டிகளில் தங்கம் வென்றுள்ள மூன்றாவது வீரர் என்ற பெருமை மாஹ்ரனைச் சேரும். முன்னதாக அமெரிக்காவின் மைக்கல் ஃபெல்ப்ஸ், மார்க் ஸ்பிட்ஸ் இருவரும் அந்தச் சாதனையைப் படைத்தனர். ஃபெல்ப்ஸ், ஸ்பிட்ஸ் போன்ற நீச்சல் நட்சத்திரங்களுடன் இப்போது மாஹ்ரன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறார்.
“அவர்களுடன் என்னை ஒப்பிட்டுப் பார்ப்பது நம்ப முடியாத ஒன்று. இப்போதுகூட என்னால் நம்ப முடியவில்லை. சில நாள்கள் கழித்துதான் நம்பக்கூடும்,” என்றார் பிரான்சின் டுலூஸ் நகரைச் சேர்ந்த 22 வயது மாஹ்ரன். அவரின் பயிற்றுவிப்பாளரான பாப் பாவ்மன், ஃபெல்ப்சுக்கும் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியவர்.
23 தங்கப் பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்த ஃபெல்ப்ஸ், மாஹ்ரனின் மிகப் பெரிய ரசிகர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அந்தப் பையனால் மிகச் சிறப்பாக நீந்த முடியும் என்பது தெளிவாகத் தெரிந்ததே. அதை அறியாதோரும் மாஹ்ரன் நீண்டகாலத்துக்குப் போட்டியிடுவதைப் பார்த்துத் தெரிந்துகொள்வர். அவரால் ஆரவாரமாக இருக்கப் போகிறது,” என்று ஃபெல்ப்ஸ் மாஹ்ரனைப் பாராட்டிப் பேசினார்.
ஃபெல்ப்சுடன் மாஹ்ரனை ஒப்பிடுவது நியாயமானதுதான் என்றார் பாவ்மன்.
தொடர்புடைய செய்திகள்
“அவரால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். அவர் தனது முழு ஆற்றலை இன்னும் வெளிப்படுத்தவில்லை,” என்று பாவ்மன் குறிப்பிட்டார்.
மாஹ்ரன், மற்றொரு பிரெஞ்சு நீச்சல் வீரரான ஃபுலோரோன் மனாடூவின் ‘வாரிசு’ என்றும் சிலர் கருதுகின்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் 50 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார் மனாடூ.
மாஹ்ரன், மனாடூவை விஞ்சிவிட்டார் என்றும் சிலர் கருத்துரைத்துள்ளனர்.