தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒலிம்பிக் காற்பந்து: அர்ஜென்டினாவை வெளியேற்றிய பிரான்ஸ்

1 mins read
cf138db3-4f6f-4315-82ce-85eccae907e2
காலிறுதிச் சுற்று ஆட்டத்துக்குப் பிறகு பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகளின் விளையாட்டாளர்களும் பயிற்றுவிப்பாளர்களும் மோதிக்கொண்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆண்கள் காற்பந்துப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது பிரான்ஸ்.

இந்தக் காலிறுதிச் சுற்று ஆட்டத்தின் ஒரே கோலை பிரான்சின் ‌‌ஷோன்-ஃபிலிப்பே மட்டெட்டா போட்டார். இதையடுத்து ஒலிம்பிக் விளையாட்டுகளை ஏற்று நடத்தும் பிரான்ஸ் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

ஸ்பெயின், மொரோக்கோ, எகிப்து ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதியாட்டத்தில் ஜப்பானை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது ஸ்பெயின்.

பிரான்ஸ்-அர்ஜென்டினா ஆட்டம் முடிந்த பிறகு இரு அணிகளின் விளையாட்டாளர்களும் பயிற்றுவிப்பாளர்களும் திடலில் மோதிக்கொண்டனர். அவர்கள் திடலைவிட்டு தயார் அறைகளுக்குத் திரும்பிச் செல்லும்போதும் சண்டை தொடர்ந்தது.

இவ்வாண்டு ஜூலை மாதம் மூத்த விளையாட்டாளர்களைக் கொண்ட அர்ஜென்டினா அணி லத்தீன் அமெரிக்க தேசிய அணிகள், மற்ற கண்டங்களின் அழைப்பு விடுக்கப்பட்ட ஓரிரு அணிகள் ஆகியவற்றுக்கான கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்றது. அந்த ஆட்டம் முடிந்த பிறகு அர்ஜென்டினா வீரர்கள் பிரெஞ்சு வீரர்களை இன ரீதியாகத் தாக்கி முழக்கமிட்டுக் கொண்டாடியது காணொளியில் பதிவானது.

அதற்குப் பிறகு முதன்முறையாக இரு அணிகளும் மோதிக்கொண்டன.

கத்தாரில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்திலும் மூத்த வீரர்களுக்கான பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான அந்த ஆட்டத்தின் இறுதி கோல் எண்ணிக்கை 3-3. பெனால்டிகளில் வென்று 36 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு உலகக் கிண்ணத்தை வென்றது அர்ஜென்டினா.

குறிப்புச் சொற்கள்