பாரிஸ்: இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்கா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுகளில் 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அமெரிக்கா இப்பிரிவில் தங்கம் வென்றுள்ளது. 9.79 விநாடிகளில் பந்தயத்தை முடித்து வாகை சூடினார் அந்நாட்டின் நோவா லைல்ஸ்.
மிக மிக குறுகிய வித்தியாசத்தில் லைல்ஸ் வெற்றிபெற்றார். போட்டியாளர்களுக்கிடையே அதிக வித்தியாசம் இல்லாதிருந்த இப்பந்தயம், வரலாற்றில் ஆக விறுவிறுப்பான பந்தயங்களில் ஒன்று என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிப் பதக்கம் வென்ற ஜமைக்காவின் கிஷேன் தாம்ப்சனும் 9.79 விநாடிகளில் பந்தயத்தை முடித்தார். அவரைவிட லைல்ஸ் 0.005 விநாடிகள் வேகமாக ஓடி முடித்தார்.
மற்றோர் அமெரிக்கரான ஃபெரெட் கெர்லி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
சென்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கம் வென்ற இத்தாலியின் லமோன்ட் மார்செல் ஜேக்கப்ஸ் காயமுற்றிருந்ததால் கட்டுப் போட்டுக்கொண்டிருந்தார். இம்முறை அவர் ஐந்தாவது இடத்தில் முடித்தார்.
200 மீட்டர் பிரிவில் மூன்று முறை உலக விருதை வென்றவர் லைல்ஸ். ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்ற சென்ற ஒலிம்பிக் விளையாட்டுகளின் 100 மீட்டர் பிரிவில் போட்டியிட அவர் தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து, இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளின் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் லைல்ஸ் பங்கேற்கவிருக்கிறார்.