தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவிப்பு

2 mins read
170b9dd0-0fdb-49b3-88ba-b10fc6ad5d41
நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மல்யுத்தம் என்னைப் போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய உத்வேகம் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 - 2024 மல்யுத்தத்துக்கு குட் பை,” என்று வினேஷ் போகத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம்,வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த சாரா சாரா அன் ஹில்டெப்ராண்டுடன் மோத இருந்தார் வினேஷ் போகத். இந்த ஆட்டம் புதன்கிழமை இரவு நடக்க இருந்தது. முன்னதாக காலை 9 மணி அளவில் வினேஷ் போகத்துக்கு எடை தகுதிச் சோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்தது தெரியவந்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

3வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், இம்முறை பதக்கத்துடன் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்