தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

10 மணிநேரத்தில் 4.6 கிலோ எடை குறைத்து பதக்கம் வென்ற அமன் செராவத்

2 mins read
80d3b2db-8d85-49ed-ad01-d7d0190bfefd
வெண்கலம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் அமன் செராவத். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

பாரிஸ்: இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் 57 கிலோகிராம் எதேச்சை பாணி மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்தியாவின் அமன் செராவத்.

11 வயதிலேயே பெற்றோரை இழந்த 21 வயதாகும் அமன், ஒலிம்பிக் விளையாட்டுகளில் பதக்கம் வென்ற ஆக இளம் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து அந்த சாதனையைப் படைத்தார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வென்று பிவி சிந்து சாதனை புரிந்தார்.

முதன்முறையாக ஒலிம்பிக் விளையாட்டுகளில் போட்டியிட்ட அமன், ஆண்கள் 57 கிலோகிராம் எதேச்சை பாணி மல்யுத்தப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வெல்லும் வீரரைத் தீர்மானிக்கும் போட்டியில் புவெர்ட்டோ ரிக்கோவின் டாரியன் குருஸ் எனும் வீரரை 13-5 எனும் புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றார்.

மேலும், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு முன்பு அமன் 10 மணிநேரத்தில் 4.6 கிலோகிராம் எடை குறைத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாதிருந்தால் அவருக்கும் சக இந்திய மல்யுத்த வீராங்கனையான வினே‌ஷ் போகத்துக்கு நேர்ந்த அதே நிலைமை ஏற்பட்டிருக்கும்; அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்.

இவ்வாண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளின் மல்யுத்தப் போட்டிகளில் இதுவே இந்தியா கைப்பற்றியுள்ள முதல் பதக்கமாகும். இது, இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா வென்றுள்ள ஆறாவது பதக்கம்.

மேலும், ஒலிம்பிக் ஆண்கள் 57 கிலோகிராம் எதேச்சை பாணி மல்யுத்தப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அந்நாடு பதக்கம் வென்றிருக்கிறது. முன்னதாக ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் அரங்கேறிய 2020 ஒலிம்பிக் விளையாட்டுகளில் ரவி குமார் தஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தப் போட்டிகளில் இந்தியா இதுவரை எட்டு பதக்கங்களைக் குவித்திருக்கிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றுவரும் இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகள், இந்தியாவுக்கு இரண்டாவது ஆகச் சிறப்பானவையாக அமைந்துள்ளன. 2020 தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளில்தான் இந்தியா ஆக அதிக பதக்கங்களை வென்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்