ஒலிம்பிக் ஆண்கள் 100 மீ. அஞ்சல் ஓட்டம்: கனடாவுக்குத் தங்கம், அமெரிக்காவுக்குப் பங்கம்

2 mins read
04994e68-aabe-4ca9-b4bc-d1804ad1c7bd
ஆண்கள் 100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் ஆண்ட்ரே டி கிராசைக் கொண்ட கனடிய அணி தங்கம் வென்றது. - படம்: இபிஏ

பாரிஸ்: இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் 100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் தங்கம் வென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது கனடா.

பந்தயத்தில் கனடாவைச் சேர்ந்த குழு எடுத்துக்கொண்ட நேரம் 37.50 நொடிகள். ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்ற சென்ற ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற ஆண்ட்ரே டி கிராசின் தலைமையில் இந்த விளையாட்டுகளின் 100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் அசத்தியது கனடா.

ஏரன் பிரவுன், ஜெரோம் பிலேக், பிரெண்டன் ரோட்னி ஆகியோர் கனடியக் குழுவில் இருந்த இதர வீரர்கள்.

இப்போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது தென்னாப்பிரிக்கா. அதன் குழு எடுத்துக்கொண்ட நேரமான 37.57 நொடிகள் ஓர் ஆப்பிரிக்க சாதனையாகும்.

37.61 நொடிகளில் முடித்த பிரிட்டனைச் சேர்ந்த குழு வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இப்போட்டியில் அமெரிக்காவுக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி. வாகை சூடும் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கக் குழு போட்டியிலிருந்து நீக்கப்பட்டது.

அஞ்சல் ஓட்டத்தின்போது கோலை அடுத்த வீரரிடம் சரியான முறையில் ஒப்படைக்காததால் அமெரிக்கக் குழு நீக்கப்பட்டது.

அதேவேளை, பெண்கள் 100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் தங்கத்தைக் கைப்பற்றியது அமெரிக்கா. இப்பிரிவில் அமெரிக்கா 12வது முறையாக வாகை சூடியிருக்கிறது.

பெண்கள் 100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தின் கடைசி 100 மீட்டரை ஓடிய அமெரிக்காவின் ‌ஷா’காரி ரிச்சர்ட்சன் (வலது).
பெண்கள் 100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தின் கடைசி 100 மீட்டரை ஓடிய அமெரிக்காவின் ‌ஷா’காரி ரிச்சர்ட்சன் (வலது). - படம்: ஏஎஃப்பி

மெலிசா ஜெஃபர்சன், துவானி‌ஷா டெரி, கேபி தாமஸ், ‌ஷா’காரி ரிச்சர்ட்சன் ஆகியோரைக் கொண்ட அமெரிக்கக் குழு தங்கப் பதக்கத்தை வென்றது. அது எடுத்துக்கொண்ட நேரம் 41.78 நொடிகள்.

இப்போட்டியில் சற்று தடுமாறிய அமெரிக்கக் குழு, கோலை அடுத்த வீரரிடம் கொடுப்பதில் பிரிட்டடி‌ஷ் குழு தவறு இழைத்ததை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது.

எனினும், பிரிட்டன் வெள்ளிப் பதக்கத்தை வென்றது. வெண்கலம் ஜெர்மனிக்குச் சென்றது.

குறிப்புச் சொற்கள்