தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வினேஷ் போகத்திற்கு புதுடெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

2 mins read
90b32c06-5561-481f-800d-c04ecde1d7ed
ஷாக்சி மாலிக், பஜ்ரங் புனியாவை பார்த்ததும் வினேஷ் போகத் கண்ணீர் வடித்தார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளின் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ், பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். வினேஸ் போகத்துக்கு இந்திய விளையாட்டு ஆளுமைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சுவிஸ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதே பதக்கம் பெறுவதற்காக அடுத்து உள்ள ஒரே வழி என்று இந்திய ஒலிம்பிக் சங்க வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக அறிக்கை ஒன்றை வினேஷ் வெளியிட்டிருந்தார்.

அதில், “என்னுடைய எதிர்காலம் என்ன, அடுத்த பயணத்தில் எனக்கு என்ன காத்திருக்கிறது என்பதை என்னால் தற்போது கணிக்க முடியாது. ஆனால் நான் எதை நம்புகிறேனோ, அதற்காகவும் சரியான விஷயத்திற்காகவும் எப்போதும் போராடுவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று தெரிவித்திருந்தார்.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 17), வினேஷ் போகத் புதுடெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வினேஷ் போகத்தை வரவேற்க அவரது சகோதரர் ஹரிந்தர் சிங் வந்திருந்தார்.

விமான நிலையத்திற்கு வந்திருந்த மல்யுத்த வீரர்களான ஷாக்சி மாலிக், பஜ்ரங் புனியாவைப் பார்த்ததும் வினேஷ் போகத் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தார்.

குறிப்புச் சொற்கள்