லண்டன்: புதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தில் தங்களின் முதல் ஆட்டத்திலேயே ஜாம்பவான்களான செல்சியும் மான்செஸ்டர் சிட்டியும் மோதவுள்ளன.
இரு குழுக்களும் அண்மைய ஆண்டுகளில் பல கிண்ணங்களைக் குவித்துள்ளன. எனினும், செல்சி கடந்த ஈராண்டுகளாகப் பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளது.
அந்த வகையில், புதிய நிர்வாகியான என்ஸோ மரெஸ்காவின் தலைமையில் மீண்டெழும் இலக்குடன் உள்ளது செல்சி. மரெஸ்கா, அமெரிக்கரான டாட் பொவெலி செல்சி உரிமையாளராக ஆன பிறகு நியமிக்கப்பட்டுள்ள ஐந்தாவது நிர்வாகி ஆவார்.
சற்று சரிந்தாலும் நிர்வாகியைப் பணிநீக்கம் செய்யும் பழக்கம் கொண்ட குழு செல்சி எனக் கருதப்படுகிறது. அப்படியிருக்கையில் குழுவைச் சரிசெய்யத் தனக்குக் கால அவகாசம் கொடுக்குமாறு மரெஸ்கா, உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“என்னைப் பொறுத்தவரை நமக்கும் இங்கிலாந்தில் கொடிகட்டிப் பறக்கும் குழுக்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் காலம்தான்,” என்றார் மரெஸ்கா. “அக்குழுக்கள் எட்டு, ஒன்பது ஆண்டுகளுக்குக்கூட ஒரே நிர்வாகியுடன் செயல்படுகின்றன. நானோ இதுவரை ஒரு மாதம்தான் இங்கு பொறுப்பில் இருக்கிறேன். நிச்சயமாக கால அவகாசம் இருந்தால் தரத்தில் உள்ள இடைவெளியை எங்களால் குறைக்க முடியும். அது மிக விரைவில் நடக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மரெஸ்கா, பிரிமியர் லீக் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலாவின் நண்பராவார். இதற்கு முன்பு செல்சி நிர்வாகிகளாக சோபிக்க முடியாமல் போன மொரிச்சியோ பொக்கட்டினோ, கிராஹம் போட்டர், ஃபிராங்க் லாம்பார்ட் ஆகியோர் விட்டுச்சென்றுள்ள வெற்றிடத்தை மரெஸ்கா நிரப்புவார் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக கார்டியோலா தெரிவித்துள்ளார்.
மரெஸ்கா. முன்னதாக சிட்டியில் கார்டியோலாவின்கீழ் பயிற்றுவிப்பாளராகவும் இருந்தவர்.
சென்ற பருவத்தில் லீக் கிண்ணத்தை வென்ற சிட்டி, அடுத்தடுத்து நான்கு முறை வாகை சூடி வரலாறு படைத்தது. இருந்தாலும் சென்ற பருவம் லீக்கில் செல்சியுடன் மோதிய இரு ஆட்டங்களிலும் சிட்டி வெல்லவில்லை.
தொடர்புடைய செய்திகள்
சிட்டியின் முக்கியமான நடுத்திடல் வீரரான ரொட்ரி, காயமுற்றிருப்பதால் செல்சிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிட்டியின் இதர நட்சத்திரங்களான ஃபில் ஃபோடன், ஜான் ஸ்டோன்ஸ், கைல் வாக்கர் ஆகியோர் கடந்த வாரம்தான் விடுமுறை முடிந்து பயிற்சிக்குத் திரும்பினர்.
“அவர்களால் முழு 90 நிமிடங்களுக்கு விளையாட முடியாது. 15 நிமிடங்கள் வாக்கில் விளையாடக்கூடும்,” என்று கார்டியோலா தெரிவித்தார்.
செல்சி-சிட்டி ஆட்டம், சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) இரவு 11.30 மணிக்கு செல்சியின் ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறும்.