தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இபிஎல்: வெற்றியுடன் தொடங்கிய வரலாற்று நாயகன்

2 mins read
6c312ccb-8177-49be-8cf7-22587a34ef1b
பிரைட்டனின் 31 வயது நிர்வாகி ஃபாபியன் ஹூர்ஸெல. - படம்: ராய்ட்டர்ஸ்

லிவர்பூல்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) காற்பந்து வரலாற்றில், நிரந்தரப் பொறுப்பில் உள்ள ஆக இளம் நிர்வாகி என்ற பெருமையைப் பெற்றிருக்கும் பிரைட்டன் குழுவின் ஃபாபியன் ஹூர்ஸெல, வெற்றியுடன் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டுள்ளார்.

சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 17) நடைபெற்ற எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 31 வயது ஹூர்ஸெலவின் பிரைட்டன் 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது. இது, புதிய லீக் பருவத்தில் பிரைட்டனின் முதல் ஆட்டமாகும்.

1992ஆம் ஆண்டு இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு பிறந்து பிரிமியர் லீக் குழு ஒன்றுக்கு நிர்வாகியாக இருக்கும் முதல் நபர் ஹூர்ஸெல.

இதற்கிடையே, விட்ட இடத்திலிருந்தே புதிய பருவத்தைத் தொடங்கியுள்ளது ஆர்சனல்.

வுல்சுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவது கோலைப் போட்ட பிறகு கொண்டாடும் ஆர்சனல் வீரர்கள்.
வுல்சுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவது கோலைப் போட்ட பிறகு கொண்டாடும் ஆர்சனல் வீரர்கள். - படம்: இபிஏ

சென்ற பருவம் நூலிழையில் லீக் விருதை வெல்லத் தவறிய அக்குழு புதிய பருவத்தில் தனது முதல் ஆட்டத்தில் வுல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது. இப்பருவத்திலும் ஆர்சனல் நடப்பு வெற்றியாளர் சிட்டிக்கு சவால் விடுக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் தலைதூக்கியது.

ஓர் ஆட்டத்தை வைத்து ஏதும் கணிக்க முடியாது என்றாலும்கூட வுல்சுக்கு எதிரான ஆட்டத்தை ஆர்சனல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அணுகியது ரசிகர்களுக்கு உற்சாகமளித்தது. கய் ஹாவர்ட்ஸ், புக்காயோ சாக்கா இருவரும் ஆர்சனலின் கோல்களைப் போட்டனர்.

ஒன்பது ஆண்டுகளாக யர்கன் கிளோப்பின் தலைமையில் இருந்த பிறகு இப்போது புதிய நிர்வாகி ஆர்ன ஸ்லொட்டின்கீழ் முதல் லீக் ஆட்டத்திலேயே வெற்றிபெற்றுள்ளது லிவர்பூல். சாம்பியன்‌ஷிப் லீக்கிலிருந்து பிரிமியர் லீக்கிற்கு முன்னேறியிருக்கும் இப்சுவிச் டவுனை 2-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.

இப்சுவிச்சுக்கு எதிராக முதல் கோலைப் போட்ட பிறகு கொண்டாடும் லிவர்பூல் வீரர்கள்.
இப்சுவிச்சுக்கு எதிராக முதல் கோலைப் போட்ட பிறகு கொண்டாடும் லிவர்பூல் வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

பிற்பாதியாட்டத்தில் டியோகோ ஜோட்டா, முகம்மது சாலா இருவரும் லிவர்பூலின் கோல்களைப் போட்டனர்.

தங்களை மேம்படுத்திக்கொள்ள ஓரளவு செலவு செய்து புதிய விளையாட்டாளர்களை வாங்கியிருக்கும் ஆஸ்டன் வில்லா, வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவுடன் மோதிய ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது.

வில்லாவின் இரண்டாவது கோலைப் போட்ட கொலம்பிய வீரர் ஜான் டியூரன் (வலமிருந்து இரண்டாவது).
வில்லாவின் இரண்டாவது கோலைப் போட்ட கொலம்பிய வீரர் ஜான் டியூரன் (வலமிருந்து இரண்டாவது). - படம்: ஏஎஃப்பி

சென்ற பருவத்தில் மிகச் சிறப்பாக விளையாடி லீக் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்த வில்லா, இம்முறை அதற்கும் ஒருபடி மேல் செல்லும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர் அதன் ரசிகர்கள்.

குறிப்புச் சொற்கள்