லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் சண்டர்லேண்ட் மீண்டும் களமிறங்குகிறது.
‘சாம்பியன்ஷிப் பிளே ஆஃப்’ இறுதியாட்டத்தில் செஃப்பீல்ட் யுனைடெட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலிஷ் பிரிமியர் லீக்கிற்கு சண்டர்லேண்ட் தகுதி பெற்றது.
ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் செஃப்பீல்ட் முதல் கோல் அடித்து முன்னிலை வகித்தது.
அதன்பின்னர் 76வது நிமிடத்தில் சண்டர்லேண்ட் தனது முதல் கோலை அடித்து ஆட்டத்தைச் சமநிலைப் படுத்தியது. ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் சீறிப்பாய்ந்த சண்டர்லேண்ட் கடைசி நிமிடங்களில் இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தது.
இந்த வெற்றியின் மூலம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிக்குச் சண்டர்லேண்ட் தகுதி பெற்றுள்ளது.
மேலும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்றதால் சண்டர்லேண்ட் அணிக்குத் தொலைக்காட்சி உரிமம் மூலம் கிட்டத்தட்ட 350 மில்லியன் வெள்ளி கூடுதல் வருமானம் கிடைக்கும்.
பிரிமியர் லீக்கில் மீண்டும் களமிறங்குவதால் சண்டர்லேண்ட் அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

