ஹைதராபாத் வீரர்களுக்கு கலாநிதி மாறனின் மகள் புகழாரம்

1 mins read
167a871a-5fb9-4292-9d9e-015600a830c5
ஆட்டம் முடிந்த பிறகு ஹைதராபாத் வீரர்களிடம் உரையாற்றும் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன். - படம்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்/எக்ஸ்

சென்னை: 2024 இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிகரமான பயணத்தை அதன் தலைமை நிர்வாகியும் இணை உரிமையாளருமான காவ்யா மாறன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய ஹைதராபாத் அணி வீரர்கள், டி20 கிரிக்கெட் விளையாட்டு குறித்த கண்ணோட்டத்திற்கு புது வடிவம் தந்துள்ளதாக அவர் சொன்னார்.

சென்னையில் நடைபெற்ற ஹைதராபாத் அணியுடனான இறுதிப் போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற கோல்கத்தா நைட் ரைடர்ஸ், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஐபிஎல் கிண்ணத்தை ஏந்தியது.

இப்போட்டியில் ஹைதராபாத் எடுத்த 113 ஓட்டங்கள், ஐபிஎல் இறுதிப் போட்டி வரலாற்றிலேயே ஆகக் குறைவான எண்ணிக்கையாகும். எனினும், ஐபிஎல் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய அவ்வணி வீரர்கள், ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.

இறுதிப் போட்டியில் ஹைதராபாத் தோற்றாலும், ஆட்டத்திற்குப் பின்பு வீரர்களை காவ்யா வெகுவாகப் பாராட்டினார்.

காவ்யா, 32, சன் குழுமத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான திரு கலாநிதி மாறனின் மகளாவார்.

குறிப்புச் சொற்கள்