தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற சூர்யகுமார் முழுமுயற்சி

2 mins read
ba1c191f-b5b3-4164-907e-2afd6b6a2d08
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதன்மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள முடியும் என்று இந்திய டி20 அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஜூன் மாதம் டி20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்ற பிறகு, அனைத்துலக டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார் ரோகித் சர்மா. அதனைத் தொடர்ந்து, டி20 அணியின் புதிய தலைவராக சூர்யகுமார் நியமிக்கப்பட்டார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின்மூலம் அனைத்துலக டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார் சூர்யா. ஆயினும், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயத்தாலும் நடுவரிசைப் பந்தடிப்பாளர்களுக்குக் கடும் போட்டி இருந்ததாலும் அவரால் மீண்டும் அணியில் இடம்பெற முடியாமல் போனது.

“கடுமையான உழைப்பின்மூலம் இந்திய அணியில் பலர் இடம்பிடித்துள்ளனர். அவ்வகையில், நானும் டெஸ்ட் அணிக்குத் திரும்ப விரும்புகிறேன்,” என்றார் சூர்யா.

அடுத்த நான்கு மாதங்களில் இந்திய அணி பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகளும் அவற்றில் அடங்கும்.

இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சர்ஃபராஸ் கான் போன்றோர் நடுவரிசைப் பந்தடிப்பாளர்களாக இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

அதனால், தனக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பது தன் கையில் இல்லை என்கிறார் சூர்யா.

“புச்சிபாபு தொடரிலும், அதன்பின் துலீப் கிண்ணப் போட்டியிலும் விளையாடுவதில்தான் இப்போது நான் கவனம் செலுத்தவுள்ளேன். அதன்பிறகு நடப்பது நடக்கட்டும்,” என்று அவர் சொன்னார்.

இந்தியா - பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து, நியூசிலாந்துடன் மூன்று போட்டிகளில் மோதும் இந்திய அணி பின்னர் நவம்பரில் ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்