துபாய், அபுதாபியில் டி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

1 mins read
9e270527-3ae1-4130-968e-3acea243a0dd
அபுதாபியின் ஷேக் ஸய்யித் கிரிக்கெட் விளையாட்டரங்கு. - படம்: ராய்ட்டர்ஸ்

ஆடவர்களுக்கான டி20 ஆசியக் கிண்ணப் போட்டிகள் துபாயிலும் அபுதாபியிலும் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் மன்றம் தெரிவித்துள்ளது. இதில், பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் மோதுகின்றன.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் இந்தத் தொடரில், கடந்த முறையைவிட இரண்டு அணிகள் கூடுதலாக, மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இதில், துபாயில் 11 போட்டிகளும் அபுதாபியில் எட்டுப் போட்டிகளும் நடக்கவுள்ளன.

தொடரின் முதல் போட்டி அபுதாபியில் ஆப்கானிஸ்தானுக்கும் ஹாங்காங்கிற்கும் இடையே நடைபெறும். இறுதிப் போட்டி துபாயில் நடைபெறும்.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) வெளியான செய்திக் குறிப்பில், “உலகின் மிகவும் துடிப்பான கிரிக்கெட் மையங்களில் ஒன்றான ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இந்தப் போட்டிகளை நடத்துவது, ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொண்டுவர உதவும்,” என்று ஆசிய கிரிக்கெட் மன்றத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி கூறினார்.

“வீரர்கள், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கு துபாயும் அபுதாபியும் தயாராக உள்ளன,” என்றும் அவர் தெரிவித்தார்.

நடப்பு வெற்றியாளரான இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஓமான் ஆகியவை ‘ஏ’ பிரிவிலும் பங்ளாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகியவை ‘பி’ பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்