டி20 உலகக் கிண்ணம்: இந்தியாவில் விளையாடுவது குறித்து பங்ளாதேஷ் யோசனை

2 mins read
afd3d5ba-3465-4e12-b81b-e4c7411d8fac
இந்தியாவுக்கும் பங்ளாதே‌சுக்கும் இடையே அரசதந்திர உறவில் எழுந்துள்ள விரிசல் விளையாட்டுத் துறையையும் பாதித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: பங்ளாதே‌ஷ் கிரிக்கெட் வாரியம் இவ்வாண்டு இந்தியாவில் நடக்கும் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கும் பங்ளாதே‌சுக்கும் இடையே அரசதந்திர உறவில் எழுந்துள்ள விரிசல் விளையாட்டுத் துறையையும் பாதித்துள்ளது.

சனிக்கிழமை (ஜனவரி 3), இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐபிஎல் அணியான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து பங்ளாதே‌ஷ் வீரர் முஸ்தஃபிசுர் ரகுமானை நீக்க உத்தரவிட்டது.

கோல்கத்தா அணியும் பிசிசிஐ உத்தரவைப் பின்பற்றி ரகுமானை நீக்கியது.

இது பங்ளாதே‌ஷ் கிரிக்கெட் வாரியத்தை அதிருப்தியில் தள்ளியது. பின்னர் அது உடனடியாக அவசரக் கூட்டத்தை நடத்தியது.

பங்ளாதே‌ஷ் அனைத்துலக கிரிக்கெட் மன்றத்திடம் பாதுகாப்பைக் காரணம் காட்டி உலகக் கிண்ணப் போட்டியில் தங்களது அணியின் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்றுமாறு கடிதம் எழுதத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகள் இந்தியாவிலும் இலங்கையிலும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடக்கவுள்ளன.

பங்ளாதே‌ஷ் அணியின் மூன்று ஆட்டங்களைக் கோல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி ஆகிய அணிகளுடனான ஆட்டங்களைப் பங்ளாதே‌ஷ் அங்கு விளையாடும்.

ஓர் ஆட்டத்தை மும்பையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நேப்பாளத்தை பங்ளாதே‌ஷ் சந்திக்கவுள்ளது.

இந்நிலையில், பங்ளாதே‌ஷின் கோரிக்கையை ஏற்பது சற்று சிரமமானது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

“அணிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பப் போட்டி அட்டவணையை மாற்ற முடியாது. அது, போட்டியின் அனைத்துத் திட்டங்களையும் அச்செயல் முடக்கிவிடும்,” என்று பிசிசிஐ பதிலடி கொடுத்துள்ளது.

இதற்கிடையே, இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் ஆட்டங்களைத் தங்களது நாட்டில் ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும் பங்ளாதே‌ஷில் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்