துபாய்: டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான முதல் சுற்று லீக் ஆட்டத்தைப் புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் வரும் 7ஆம் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்குகிறது. இதில் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் போட்டியை நடத்தும் நடப்பு வெற்றியாளரான இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
அரசியல் காரணங்களால் இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன.
இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகத் தங்கள் அணி விளையாடும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டுமென பங்ளாதேஷ், அனைத்துலக கிரிக்கெட் மன்றத்திடம் முறையிட்டது.
அதை மன்றம் ஏற்கவில்லை. அதனால் பங்ளாதேஷ் அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் கூறி வந்தது. இதைக் கிரிக்கெட் மன்றம் கடுமையாக எச்சரித்தது.
இந்நிலையில், இந்தியாவுடன் 15ஆம் தேதி நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண ஆட்டத்தை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

