அகமதாபாத்: டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 2,000 ஓட்டங்களை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது சாய் சுதர்சன்.
ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிவரும் சாய் சுதர்சன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக வெள்ளிக்கிழமை (மே 2) நடந்த ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டினார். அவர் அந்த ஆட்டத்தில் 23 பந்துகளில் 48 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
ஈராயிரம் ஓட்டங்களை எடுக்க சாய் சுதர்சனுக்கு 54 இன்னிங்ஸ்களே தேவைப்பட்டன. முன்னதாக, இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் 59 இன்னிங்ஸ்களில் 2,000 ஓட்டங்களை எடுத்திருந்ததே முன்னைய சாதனையாக இருந்தது.
அனைத்துலக அளவில், 53 இன்னிங்ஸ்களில் 2,000 ஓட்டங்களைக் குவித்து பட்டியலின் முதலிடத்தில் இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை பத்து ஆட்டங்களில் விளையாடி ஐந்து அரைசதங்களுடன் 504 ஓட்டங்களைக் குவித்து, அதிக ஓட்டங்கள் குவித்தோர் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளதால் ‘ஆரஞ்சுத் தொப்பி’யும் தற்போது சாய் சுதர்சன் வசமிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் அணியை 38 ஓட்ட வித்தியாசத்தில் வென்று குஜராத் அணி புள்ளிப் பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

