நியூயார்க்: அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீசிலும் நடைபெறும் டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் ஜூன் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது.
முதல் போட்டியில் அமெரிக்காவும் கனடாவும் பொருதவுள்ளன.
பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் முதல் சுற்றுப் போட்டி, நியூயார்க் மாநிலம், லாங் ஐலண்ட் தீவில் கட்டப்பட்டுள்ள புதிய அனைத்துலக கிரிக்கெட் அரங்கில் ஜூன் 9ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இம்முறை மொத்தம் 20 அணிகள், பிரிவிற்கு ஐந்து அணிகள் என நான்கு பிரிவுகளாகப் போட்டியிடும்.
‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஜூன் 5ல் அயர்லாந்து, ஜூன் 12ல் அமெரிக்கா, ஜூன் 15ல் கனடா அணிகளுடன் இந்தியா மோதும்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமான் ஆகிய அணிகள் ‘பி’ பிரிவில் உள்ளன.
‘சி’ பிரிவில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினி ஆகிய அணிகளும் ‘டி’ பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்ளாதேஷ், நெதர்லாந்து, நேப்பாளம் ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவில் மூன்று, வெஸ்ட் இண்டீசில் ஆறு என மொத்தம் ஒன்பது அரங்குகளில் போட்டிகள் நடைபெறும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் எட்டு’ சுற்றுக்குத் தகுதிபெறும். அதில் எட்டு அணிகள் இரு பிரிவுகளாகப் போட்டியிடும். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
ஜூன் 26, 27 தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும் 29ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.