கொழும்பு: 2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றிலேயே ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
கிரிக்கெட் உலகில் பல உலகக் கிண்ணங்களை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு இது பேரிடியாகப் பார்க்கப்படுகிறது.
திங்கட்கிழமை (பிப்ரவரி 16) இரவு நடந்த ‘பி’ பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணியிடம் தோற்றது. அதற்குச் சில நாள்களுக்குமுன் ஸிம்பாப்வேயிடமும் அது மண்ணைக் கவ்வியது. இதனால், அவ்வணி ‘பி’ பிரிவில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) ஸிம்பாப்வே-அயர்லாந்து மோதவிருந்த ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டது, இதன்மூலம் ஸிம்பாவேவுக்கு ஒரு புள்ளி கிடைத்தது. அதனால், ‘சூப்பர் 8’ சுற்றுக்கு ஸிம்பாப்வே தகுதிபெற்றது.
இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஸிம்பாப்வே ஆகிய ஏழு அணிகள் ‘சூப்பர் 8’க்குத் தகுதிபெற்றுவிட்டன.
கடைசி இடத்திற்கு பாகிஸ்தான் போராடுகிறது. அது புதன்கிழமை நடக்கும் ஆட்டத்தில் நமீபியாவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வெற்றிபெற்றால் அது அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும்.
தற்போது இந்தியாவிலும் இலங்கையிலும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடந்துவருகின்றன.

