டாக்கா: இவ்வாண்டு நடக்கவுள்ள இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரிலிருந்து பங்ளாதேஷ் வீரர் முஸ்தஃபிசுர் ரகுமான் நீக்கப்பட்டதால், டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா செல்ல முடியாது என்று பங்ளாதேஷ் மறுத்து வருகிறது.
இந்தியா-பங்ளாதேஷ் இடையிலான அரசதந்திர உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், தங்கள் வீரர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இருக்காது என்று பங்ளாதேஷ் அணி நிர்வாகம் கருதுகிறது.
அதனால், பங்ளாதேஷ் அணி விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என அது கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் தொடர்பில் அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. ஆயினும், பேச்சுவார்த்தை நீடிப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், புதியதொரு சர்ச்சை வெடித்துள்ளது.
பங்ளாதேஷ் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஐசிசி பேராளர்கள் இருவர் அந்நாட்டிற்குச் செல்வர் எனக் கூறப்பட்டது. அவர்களில் ஒருவர் இந்தியர். ஆனால், அவருக்கு விசா வழங்க பங்ளாதேஷ் மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, ஐசிசி ஊழல் தடுப்பு, பாதுகாப்புப் பிரிவுத் தலைவரான ஆண்ட்ரூ எஃப்கிரேவ் மட்டும் பங்ளாதேஷ் சென்று, பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 7ஆம் தேதி டி20 உலகக் கிண்ணத் தொடர் தொடங்கவுள்ளது. இன்னும் ஒரு மாதம்கூட இல்லாத நிலையில், ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக நுழைவுச்சீட்டு விற்பனை முடிந்துவிட்டது. கடைசி நேரத்தில் அரங்குகளை மாற்றுவது பெருஞ்சிக்கலை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இப்போதைய அட்டவணைப்படி, பங்ளாதேஷ் அணி முதல் சுற்று ஆட்டங்களில் மூன்றை கோல்கத்தா ஈடன் கார்டன் அரங்கிலும் நான்காவது போட்டியை மும்பை வான்கடே அரங்கிலும் விளையாட வேண்டும்.
வீரர்கள் போர்க்கொடி
இதனிடையே, முன்னாள் பங்ளாதேஷ் வீரர் தமிம் இக்பால் குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் இயக்குநர் நஜ்முல் இஸ்லாம் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததால் அந்நாட்டு வீரர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்தியா-பங்ளாதேஷ் இடையிலான கிரிக்கெட் சர்ச்சையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று தமிம் கூறியிருந்தார். அதனையடுத்து, அவர் ‘இந்திய முகவர்’ என்று நஜ்முல் கூறியிருந்தார். அதற்கு எதிராக பங்ளாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் போர்க்கொடி உயர்த்தவே, நஜ்முல் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

