டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஹேசல்வுட்

2 mins read
98363ab8-f677-469b-99ee-64791dafc7bf
காயத்திலிருந்து தேறிவரும் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் ஜோஸ் ஹேசல்வுட் (இடது), பேட் கம்மின்ஸ். - படம்: ஹெரால்டு சன்

சிட்னி: காயத்திலிருந்து மீண்டுவரும் வேகப் பந்துவீச்சாளர்கள் பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட், அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் ஆகியோர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அடுத்த டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் வரும் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ளன.

கடந்த 2024 ஜூன் மாதத்திலிருந்து கம்மின்ஸ் அனைத்துலக டி20 போட்டிகளில் விளையாடியதில்லை. தற்போது நடந்துவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் மட்டும் விளையாடினார். முதுகில் பிரச்சினை இருப்பதால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

கால் காயம் காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்தே முழுமையாக நீக்கப்பட்டார் ஹேசல்வுட். கிறிஸ்துமசுக்கு மறுநாள் நடந்த பிக் பேஷ் லீக் டி20 போட்டியின்போது பின்தொடைத் தசைநாரில் காயமுற்றார் டிம் டேவிட்.

“அவர்கள் மூவரும் நன்கு தேறி வருவதால் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குமுன் தயாராகிவிடுவர் என நம்புகிறோம்,” என்று ஆஸ்திரேலிய அணித் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்திய, இலங்கை ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்பதால் அப்பிரிவையும் ஆஸ்திரேலிய அணி வலுப்படுத்தியுள்ளது.

இடக்கை பந்துவீச்சாளர்களான மேத்யூ குஹ்னமனும் கூப்பர் கோனலியும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

“இது முதற்கட்ட அணிதான் என்பதால் உரிய காலத்தில் மாற்றங்கள் தேவைப்படலாம்,” என்றும் பெய்லி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி 11ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்துடன் மோதவிருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (தலைவர்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனலி, பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரன் கிரீன், நேதன் எல்லிஸ், ஜோஸ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லிஷ், மேத்யூ குஹ்னமன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.

குறிப்புச் சொற்கள்