டி20 உலகக் கிண்ணம்: பங்ளாதேஷ் மறுத்தால் இன்னோர் அணிக்கு வாய்ப்பு

2 mins read
e08b6bfd-5554-41f5-9128-1de18555367e
டி20 உலகக் கிண்ணப் போட்டிகளை இந்தியாவில் விளையாட முடியாது என்று பங்ளாதேஷ் அணி நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. - படம்: ஏஎஃப்பி

துபாய்: வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்ளாதேஷ் அணி பங்கேற்பது குறித்த இறுதி முடிவு ஜனவரி 21ஆம் தேதி எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை (ஜனவரி 17) டாக்காவில் நடந்த பேச்சுவார்த்தையின்போது அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி), பங்ளாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் இதனைத் தெரிவித்துவிட்டதாக அறியப்படுகிறது.

பங்ளாதேஷில் சிறுபான்மையினர்மீதான தாக்குதலை அடுத்து, இந்தியா - பங்ளாதேஷ் இடையிலான அரசதந்திர உறவுகள் மோசமடைந்தன. கிரிக்கெட்டிலும் அது எதிரொலித்தது.

அண்மைய இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் பல கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட பங்ளாதேஷ் வீரர் முஸ்தஃபிசுர் ரகுமானை அணியிலிருந்து விடுவிக்கும்படி கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டது. அவ்வணியும் அதனை ஏற்றுக்கொண்டது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பங்ளாதேஷில் எதிர்ப்பு கிளம்பியது. அதனையடுத்து, டி20 உலகக் கிண்ணப் போட்டிகளை விளையாட இந்தியாவிற்குச் செல்ல முடியாது என்றும் தனக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் பங்ளாதேஷ் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.

ஆனால், ஐசிசி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில், பிரச்சினைக்குத் தீர்வுகாண கடந்த சனிக்கிழமை ஐசிசி பேராளர், பங்ளாதேஷ் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ‘சி’ பிரிவிலுள்ள பங்ளாதேஷை ‘பி’ பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக ‘பி’ பிரிவிலுள்ள அயர்லாந்தை ‘சி’ பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்றும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஐசிசி ஏற்க மறுத்துவிட்டது.

இந்தியாவில் பங்ளாதேஷ் அணிக்கு எந்தக் குறிப்பிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும் ஐசிசி உறுதியளித்தது.

கடந்த மூன்று வாரங்களாக பலமுறை பேச்சுவார்த்தை நடந்தும் இந்த விவகாரத்தில் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.

இறுதி முடிவு பங்ளாதேஷ் வாரியத்தின் கைகளிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை பங்ளாதேஷ் அணி இந்தியாவிற்குச் செல்ல மறுத்தால், அதற்குப் பதிலாக வேறோர் அணியை ஐசிசி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி பார்த்தால், தரவரிசையில் பங்ளாதேஷிற்கு அடுத்த நிலையிலுள்ள ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்