துபாய்: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறி இந்திய மகளிரணி ஏமாற்றமளித்தது.
நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியதால் இந்திய அணியின் அரையிறுதிக் கனவு தவிடுபொடியானது.
அரையிறுதியில் குறைந்த ஓட்ட விகித வித்தியாசத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்தைத் தோற்கடித்தால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெற முடியும் என்ற நிலை இருந்தது.
பாகிஸ்தானும் நியூசிலாந்து அணியை 110 ஓட்டங்களை மட்டுமே எடுக்கவிட்டது இந்திய அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. ஆனால், பந்தடிப்பில் பாகிஸ்தான் சோடைபோனது. அவ்வணி 11.4 ஓவர்களில் 56 ஓட்டங்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தது.
இலக்கை 12 ஓவர்களுக்குள் எட்டியிருந்தால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கைகூடியிருக்கும்.
இதனையடுத்து, ‘ஏ’ பிரிவிலிருந்து இரண்டாவது அணியாக நியூசிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்தது. நான்கு போட்டிகளிலும் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ பிரிவிலிருந்து ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது.
தொடரில் தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றதே இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழக்க முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. அதன்பின், பரபரப்பான போட்டியில் ஆஸ்திரேலியாவிடமும் அது தோற்றுப்போனது.
கடந்த 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய மகளிரணி டி20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது இதுவே முதன்முறை.